வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலக கிடங்கு பணியாளர்கள் 2 பேர் இடைநீக்கம்
வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கிடங்கு பணியாளர்கள் 2 பேரை பணி இடைநீக்கம் செய்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
வாலாஜாபாத் ஒன்றியத்தில் 61 ஊராட்சிகள் உள்ளன . இந்த ஊராட்சிகளில் நடைபெறும் பசுமை வீடு, ஊராட்சி மன்றக் கட்டிடம், அங்கன்வாடி மைய கட்டிடம், மத்திய அரசின் தொகுப்பு வீடு உள்ளிட்ட பல்வேறு கட்டுமான பணிகளுக்காக வாலாஜாபாத் பழைய வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து சிமென்ட், கம்பி, கதவு, ஜன்னல் உள்ளிட்ட பொருட்கள் விநியோகிப்பது வழக்கம்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக வாலாஜாபாத் பழைய வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கட்டுமான பணிகளுக்கு பயன்படும் கம்பிகள் நாளுக்கு நாள் குறைந்து வருவதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜ்குமாரிடடம் கிடங்கு கண்காணிப்பாளர் சசிகலா கடந்த சில தினங்களுக்கு முன்பு புகார் தெரிவித்தார்.
புகாரின் அடிப்படையில் மாவட்ட பொறியாளர்கள் நேற்று கம்பிகளின் எடையை கணக்கிட்டு பார்த்தனர். அதில் 21 டன் எடை கொண்ட கம்பிகள் குறைந்து காணப்பட்டன. இதனையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் மாவட்ட ஆட்சியரிடம் தகவல் தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சியர் முன்னதாக பணியாற்றிய கிடங்கு கண்காணிப்பாளர் கௌரிசங்கர், தற்போதைய கிடங்கு கண்காணிப்பாளர் சசிகலா ஆகியோரை பணியின் கவனக்குறைவு காரணமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
மேலும் இதுதொடர்பாக வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜ்குமார் மூலம் வாலாஜாபாத் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது
இந்த புகாரை அடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு கம்பிகள் எவ்வாறு திருடப்பட்டது. இதனை எடுத்துச் சென்றவர்கள் யார் என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
21 டன் கம்பி காணாமல் போன சம்பவம் வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.