ஆர்ப்பாக்கம் : 16 கால் மண்டபத்தை அமைத்த குடும்பத்தினரை கெளரவித்த கிராம மக்கள்
காஞ்சிபுரம் அடுத்த ஆர்ப்பாக்கம் கிராமத்தில் உள்ள திருவாலீஸ்வரர் ஆலயத்தில் நூற்றாண்டை கொண்டாடும் 16 கால் மண்டபம் அமைத்த குடும்பத்தினரை கிராம மக்கள் கௌரவித்தனர்.
காஞ்சி மாநகரத்தின் தென்பால் சுமார் ஏழு மைல் தூரத்தில் அமைந்துள்ளது அருள் சுரக்கும் ஆர்ப்பாக்கத்தில் ஆதிஆங்கிரஸர் முற்காலத்தில் பிரம்மா யாகம் செய்ய வேண்டி பலராமரை கொண்டு கலப்பையால் உழுதார். அப்போது நிலத்தில் ஓர் அதிசயம் நடந்தது. சுயம்பு லிங்க மூர்த்தியாக எம்பெருமானார் சிரசில் கொழுவுடன் தோன்றியதால் கொழுநாதர் என்றும் வாலி பூஜை செய்தமையால் திருவாலீஸ்வரர் என்றும் அழைக்கப்பட்டு வந்தார்..
பின்பு இரண்டாம் இராஜராஜன் அவர் மகன் மூன்றாம் குலோத்துங்க சோழன் ஆகியோர் வழிபட்டு வந்துள்ளனர். ஒரு சமயம் மூன்றாம் குலோத்துங்க சோழனின் ராஜகுருவான உமாபதி சிவனார் செய்த மாபெரும் அஹோர பூஜை மற்றும் வேள்வியின் பயனாக பாண்டிய மன்னர்களையும், சிங்கள மன்னர்களையும் வெற்றிகொண்டு ராஜ குரு காட்டிய வழியில் சோழ மன்னன் வீர வாகை சூடினான்.
இதன் நன்றிப் பெருக்கால் பூஜைகள் நடத்த இடமான ஆர்ப்பாக்கம் கிராமத்தை இராஜகுருவிற்கு சமர்ப்பணம் செய்தாக வரலாறு தெரிவிக்கின்றன.
இந்தத் திருவாலீஸ்வரர் திருக்கோயில் கருங்கலான பதினாறுகால் மண்டபத்தைப் கடந்த 1921 ஆம் ஆண்டு மகாதேவ குடும்பத்தினர் இலவசமாக திருக்கோயிலுக்கு கட்டிக் கொடுத்துள்ளனர்.
தற்போது நூற்றாண்டை கடந்து உள்ளதால் அந்த குடும்பத்தை சேர்ந்த உறுப்பினர்களை கௌரவிக்கும் பொருட்டு ஆர்பாக்கம் கிராம மக்கள் சார்பாக சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சிறப்பு தீபாரதனை நடைபெற்றது.
இந்த 16 கால் மண்டபத்தை அமைத்து கொடுத்த குடும்பத்தினர் திருக்கோவில் முழுவதும் வண்ண தீட்டினர். 16 கால் மண்டபத்தை மீண்டும் சீரமைத்து புதுப் பொலிவடைய செய்தனர். 16 கால் மண்டபத்தை இன்று சேலையூர் ஸ்ரீ மகா ரமணிகுருஜி முன்னிலையில் ஆடிட்டர் ராஜசேகரன் திறந்து வைத்தார்.
அதன்பின் அது கோயிலில் அமைந்துள்ள ஞான சிவனாருக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு உறுப்பினர் பரசுராமன் , ஊராட்சி மன்ற தலைவி ரா.செல்வி மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஜெ.மலர்வண்ணன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் மூன்று வகையான உணவு பிரசாதங்கள் வழங்கப்பட்டது .