பஸ் போக்குவரத்து துவக்கமா ? ஆபத்தை உணராத பேருந்துகள்..! பயணிகள் அச்சம்
காஞ்சிபுரம் – உத்திரமேரூர் சாலையில் பாலம் சேத பணிகள் நிறைவு பெறாத நிலையில் போக்குவரத்து தொடங்கியுள்ளது.;

துண்டிக்கப்பட்ட சாலையில் ஆபத்தாக செல்லும் பேருந்து.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை , வளிமண்டல மேலடுக்கு சுழற்சி , குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் என பல தொடர்ச்சியாக ஏற்பட்டதன் காரணமாக வரலாறு காணாத மழை கடந்த மாதம் பெய்தது.
மேலும் அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து நீர்வரத்து காரணமாக பாலாறு செய்யாறு உள்ளிட்ட ஆறுகளில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் கனஅடி நீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. பெருவெள்ளம் காரணமாக பாலாறு மற்றும் செய்யாறு பாலங்கள் துண்டிக்கப்பட்டு தற்போது வரை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் காஞ்சிபுரம் - உத்தரமேரூர் கீழ்ரோடு சாலையில் துண்டிக்கப்பட்ட பால இணைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல, பொதுமக்களே முடிவு செய்து செல்லத்தொடங்கினர். தற்போது மண் நிரப்பி போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் கனரக வாகனங்கள் செல்ல எந்த ஒரு சோதனையும் நெடுஞ்சாலைத்துறை மேற்கொள்ளவில்லை.
மேலும் எந்த ஒரு அபாய அறிவிப்புப் பலகை வைக்கப்படாமல் உள்ளது. தற்போது பேருந்துகள் துண்டிக்கப்பட்ட பகுதியை கடந்து செல்கின்றன. இதுபோன்ற ஆபத்தான பயணங்களில் பேருந்துகளில் உள்ளபயணிகளின் நிலை கவலைக்குரியதாகிவிடும் என்று அஞ்சுகின்றனர்.
மேலும் துண்டிக்கப்பட்ட பகுதியில் தற்போதும் அதிக அளவு நீர் செல்கிறது. நீரின் வேகத்தை ஆய்வு மேற்கொள்ளாத நெடுஞ்சாலைத்துறை கனரக வாகனங்களை அனுமதித்துள்ளது. ஒரு எச்சரிக்கை பலகை கூட வைக்காமல் வாகனங்களை அனுமதித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.