வாலாஜாபாத் பாலாற்றில் அரசு அனுமதியின்றி மணல் திருடிய மூவர் கைது
வாலாஜாபாத் பாலாற்றில் அரசு அனுமதியின்றி மணல் திருட்டில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாறு, செய்யாறு, வேகவதி ஆறு ஆகிய மூன்று ஆறுகளில் நீராதாரத்தை பாதுகாக்கும் நோக்கில் மணல் அள்ள மாவட்ட நிர்வாகம் பல ஆண்டுகளாக தடை விதித்துள்ளது.
அரசு அனுமதியின்றி ஆற்றுப்படுகையில் மணல் அள்ளுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தொடர் திருட்டில் ஈடுபட்டால் குண்டர் சட்டம் பாயும் எனவும் மாவட்ட காவல் துறையால் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வாலாஜாபாத் ஆற்றுப்படுகையில் அரசு அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக வந்த புகாரின் பேரில், வாலாஜாபாத் சார்பு ஆய்வாளர் சுரேஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, அய்யம்பேட்டை பகுதியை சேர்ந்த சதீஷ், வள்ளுவபாக்கம் பகுதியை சேர்ந்த தாமோதரன் மற்றும் ராஜேஷ் ஆகிய மூவர் மணல் திருட்டில் ஈடுபடுவது தெரிய வந்தது. இவர்கள் மூன்று பேரையும் கைது செய்து அவர்கள் மணல் அள்ள பயன்படுத்திய வாகனங்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.