தமிழகத்தில் கல்விக்காக பாடுபட்டவரின் சிலை வைக்க கல்வி துறை அனுமதி மறுப்பு
தமிழகத்தில் கல்விக்காக பாடுபட்ட நெ.து. சுந்தரவடிவேலுவின் சிலை வைக்க கல்வி துறை அனுமதி மறுப்பு உள்ளது.
இந்தியாவிலேயே எழுத்தறிவிலும் கல்வி மேம்பாட்டிலும் தமிழ்நாடு தனி சிறப்பு விளங்குகிறது என்றால் அதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர் கர்மவீரர் காமராஜ். அவரது ஆட்சி காலத்தில் கல்வி இயக்குனராக இருந்தவர் நெ.து.சுந்தர வடிவேலு.
காஞ்சிபுரம் மாவட்டம் , உத்திரமேரூர் வட்டத்திற்கு உட்பட்டது நெய்யாடுபாக்கம் கிராமம். இங்கு 1912 ஆம் ஆண்டு பிறந்தவர் நெ.து. சுந்தரவடிவேலு. மிகச் சிறந்த கல்வியாளராகவும் , தமிழ் பேச்சாளராகவும் இருந்தவர் . 1954 நான்காம் ஆண்டு பொது கல்வி இயக்குனராக பதவியேற்றார்.
அன்றைய முதலமைச்சர் காமராஜருடன் இணைந்து பல திட்டங்களை கல்விக்காக செயல்படுத்தியதில் இவர் பங்கு மிகப்பெரியது. அப்போதே குழந்தைகள் புத்தகம் மூட்டையுடன் உணவுகளையும் சுமந்து செல்லும் நிலையை மாற்ற இலவச மதிய உணவு திட்டத்தை காமராஜர் செயல்படுத்திய போது அதில் இவருடைய பங்கு அளப்பரியது.
அதேபோல் கல்வி கற்க நீண்ட தூரம் மாணவர்கள் செல்லும் நிலையை தவிர்க்க எல்லா ஊர்களிலும் ஓர் ஆசிரியர் பள்ளி திறக்க நடவடிக்கை எடுத்தவரும் இவரே.
இதேபோல் 1954 ஆம் ஆண்டு பொதுக்கல்வி இயக்குனராக பதவி ஏற்ற பொது நூலக இயக்குனராகவும் பொறுப்பேற்று கிராம ஊராட்சிகளில் நூலகம் அமைய காரணமானவராகவும் இவரே இருந்தார்.
சென்னை பல்கலைக்கழகத்தில் 1969 முதல் 75 வரை இருமுறை துணைவேந்தராக செயல்பட்டவர். பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். மேலும் பத்மஸ்ரீ விருது பெற்ற ஒரே கல்வி அதிகாரியும் இவர் தான்.
இவ்வளவு புகழ்பெற்ற நெ.து. சுந்தரவடிவேலு பிறந்த ஊரான நெய்யாடுபாக்கத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அப்போதே நிதி உதவி அளித்து தற்போது வரை இப்பள்ளி சிறப்புடன் செயல்பட்டு வருகிறது.
அவரது நினைவை போற்றும் வகையில் நெ.து.சுந்தரவடிவேலு அவர்களது மார்பளவு சிலையை அப்பள்ளியில் வைக்க அவரது அறக்கட்டளை சார்பில் தமிழக முதல்வர் தனிப்பிரிவு , பள்ளிக்கல்வித்துறை , காஞ்சிபுரம் முதன்மை கல்வி அலுவலர், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் என அனைத்திலும் அனுமதி கேட்டு கோரிக்கை மனு அளித்த நிலையில் தற்போது பள்ளிக் கல்வித் துறை சார்பில் அனுமதி மறுப்பு என குறுந்தகவல் மட்டுமே அறக்கட்டளை நிர்வாகி லெனின் என்பவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் இதுகுறித்து காரணம் என்னவென்று அறிய இயலாமல் அறக்கட்டளை நிர்வாகம் குழம்பி உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை துவக்கி வைக்கும் போது கூட நெ.து. சுந்தர வடிவேலு அவர்களின் கல்விப் பணியை குறிப்பிட்டு பேசிய நிலையில் அவரது உருவ சிலை வைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது கல்வியாளர்கள் மத்தியில் கடும் அதிரச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரத்தில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் நடைபெற்று வரும் கருத்தரங்கில் பேசிய சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் கல்விக்கு சிறந்த ஊர் காஞ்சி என்பதை நிரூபிக்கும் வகையிலும் கல்விக்காக இங்கிருந்த நெ.து. சுந்தரவ வடிவேலு செய்த கல்விப் பணிகளையும், அவரால் ஆசிரியர் ஆகிய பல நூறு நபர் ஆசிரியர் வேலை வாய்ப்பு பெற்றது உள்ளிட்டவைகளை குறிப்பிட்டு பேசினார்.
மாணவர்களின் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் தமிழக அரசு சிறப்பாக கல்விப் பணியாற்றிய இவரது சிலை வைக்க அனுமதி மறுப்பது ஏன் என்ற கேள்வி கல்வியாளர்களிடையே எழுந்துள்ளது.