உத்தரமேரூர் அருகே கிராம சபை கூட்டத்தில் எம்.எல்.ஏ. சுந்தர் பங்கேற்பு

MLA News -உத்தரமேரூர் அருகே உள்ளாட்சி தினத்தையொட்டி நடந்த கிராம சபை கூட்டத்தில் எம் எல் ஏ சுந்தர் பங்கேற்றார்.;

Update: 2022-11-01 10:13 GMT
களக்காட்டூரில் நடைபெற்ற  கிராம சபை கூட்டத்தில் எம்.எல்.ஏ. சுந்தர் பங்கேற்றார்.

MLA News -தமிழகத்தில் குடியரசு தினம்,  சுதந்திர தினம்,  காந்தி ஜெயந்தி, உழைப்பாளர் தினம் ஆகிய நான்கு நாட்களில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றவுடன் உள்ளாட்சி தினமான நவம்பர் 1ம் தேதி‌ கிராம சபை கூட்டங்கள் நடைபெறும் என அறிவித்தார்.

இந்நிலையில் கடந்த வாரம் உள்ளாட்சி தின கிராம சபை கூட்டம் சார்பாக அறிவித்த முதல்வர் இந்த வருடம் முதல் மாநகராட்சி,  நகராட்சி , பேரூராட்சி ஆகிய பகுதிகளில் பகுதி சபா கூட்டங்கள் நடைபெறும் எனவும் அறிவித்தார்.

இதன் மூலம் மக்களின் அடிப்படைத் தேவைகள் குறித்து மக்கள் பிரதிநிதிகள் அறிந்து கொண்டு அதற்கான திட்டங்களை வகுத்து செயல்படவும் முன்னெச்சரிக்கையாக தேவையான நிதிகளை தகுதி அடிப்படையில் பெற இது போன்ற கூட்டங்கள் அமையும் என்பதால் இதனை அனைத்து தரப்பு மக்களும் வரவேற்றனர்.

கிராமங்களில் நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் கிராம சபை கூட்டங்கள் நடைபெறுவது வழக்கம். முதல் முறையாக மாநகராட்சி,  நகராட்சி, பேரூராட்சிகளை மாமன்ற உறுப்பினர் மற்றும் அந்த வார்டு பகுதியை சேர்ந்த ஐந்து நபர்கள் முன் நின்று நடத்துவார்கள் எனவும் அதற்கான அரசு வழிகாட்டு முறைகளை அறிவித்தது.

அவ்வகையில் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட களக்காட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட  குருவிமலை சமூக நல கூடத்தில் ஊராட்சி மன்ற தலைவர் நளினி டில்லி பாபு தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் கா. சுந்தர் ஒன்றியக் குழு பெருந்தலைவர் மலர் கொடி குமார் , ஒன்றியக் குழு துணைத் தலைவர் திவ்யப்பிரியா இளமது ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ஊராட்சி மன்ற செயலாளர் சேகர், உள்ளாட்சி தினத்தை ஒட்டி நடைபெறும் கூட்டத்தில் பொதுமக்களுக்கு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் , ஜல்ஜீவன் திட்டம் , மக்கள் திட்ட இயக்கம் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்கள்,  தூய்மை பணியாளர்களை கௌரவித்தல் என அனைத்துப் பணிகளையும் கிராம சபை கூட்டத்தில் செயல்படுத்தப்படும் என அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் பொதுமக்கள் தங்கள் அடிப்படை தேவைகள் தேவை எனில் அது குறித்து கூறலாம் என தெரிவித்தார்.

அப்போது வார்டு உறுப்பினர் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் பள்ளி மாணவர்கள் செல்லும் வகையில் அச்சாலையை சீரமைக்க வேண்டும் எனவும், ஏழை எளிய மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு பட்டா வழங்க வேண்டும், பள்ளி வளாகத்தில் இருந்து நியாய விலை கடையை  இடமாற்றம் செய்ய வேண்டும் என மூன்று முக்கிய கோரிக்கைகளை முன் வைத்தனர்.

இதுகுறித்து பேசிய சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் , பொதுமக்கள் வைத்த கோரிக்கைகள் அனைத்தும் தற்போது பரிசீலனையில் உள்ளதாகவும், விரைவாக அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தார்.

மேலும் தூய்மையான குடிநீர் மற்றும் பொதுமக்களின் அடிப்படை வசதிகளை அனைத்தையும் இந்த அரசு நிறைவேற்றும் என்பதற்கு சாட்சியே உள்ளாட்சி தினமான இன்று கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது.

இந்த கிராம சபை கூட்டத்தில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் குமணன், தி.மு.க. நிர்வாகிகள் ஆசூர் கன்னியப்பன் , தட்சிணாமூர்த்தி,  ராஜகோபால் வீரராகவன் மற்றும் கிராம பொதுமக்கள் அரசு அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News