கொரோனா பரவலை தடுக்க கிராமங்களில் பரிசோதனை முகாம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில், கொரோனா பரவலை தடுக்கும் வகையில், கிராமங்களில் சிறப்பு பரிசோதனைகள் முகாம்களின் மூலம் வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.;
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்றால் நாள்தோறும் 400க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இன்று மட்டும், இம்மாவட்டத்தில் 301 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கிராம மக்கள் பணி நிமித்தமாக நகருக்கு வந்து செல்வதால், தொற்று நோய் பரவுவதை கட்டுப்படுத்தும் விதமாக கிராமங்களில் சிறப்பு பரிசோதனை முகாம்கள் நடத்த, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரால் திட்டமிடப்பட்டது.
குறிப்பாக, 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் பயனாளிகளுக்கும், வயது முதிர்ந்த நபர்களுக்கும் சுகாதாரத்துறை மூலம் தினந்தோறும் ஒரு கிராமம் என்ற முறையில், பரிசோதனை முகாமில் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது..
அவ்வகையில் இன்று ஐயங்கார் குளம் கிராமத்தில் நடைபெற்ற பரிசோதனை முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. இந்த முகாமினை, காஞ்சிபுரம் வருவாய்க் கோட்டாட்சியர் ராஜலட்சுமி ஆய்வு மேற்கொண்டு பொது மக்களிடையே கொரோனா பரவல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.