இன்னுயிர் காப்போம் திட்டம் : 6 நாட்களில் 971 பேர் பயன் பெற்றுள்ளனர் - எம்எல்ஏ க.சுந்தர்
இன்னுயிர் காப்போம் திட்டம் மூலம் 6 நாட்களில் 971 பேர் பயன் பெற்றுள்ளனர் என்று எம்ல்ஏ சுதாகர் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏகனாம்பேட்டை கிராம ஊராட்சி ஒன்றியத்தில் அய்யம்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மீனாட்சி மருத்துவக் கல்லூரி இணைந்து வரும் முன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு பரிசோதனை முகாம் நடைபெற்றது.
இதில் காது மூக்கு ஈசிஜி கர்ப்பிணிகளுக்கான ஸ்கேன் பல் மற்றும் பொது மருத்துவம் என பல பிரிவுகளின் கீழ் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இத்திட்டத்தில் பங்கேற்று தங்கள் உடல்களை பரிசோதனை மேற்கொண்டனர்.
இந்த சிறப்பு முகாமினை உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் மற்றும் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம் ஆகியோர் இணைந்து துவக்கி வைத்து மருத்துவ பரிசோதனைகளை ஆய்வு மேற்கொண்டனர்.
விழாவில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர், தமிழகத்தில் கடந்த சில வருடங்களாகவே சாலை விபத்துகள் அதிகம் நடைபெற்று வருகிறது. விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அரசு மருத்துவமனைகளில் சேர்க்க காலதாமதமும் அதனால் சிகிச்சை அளிக்க முடியாத நிலையில் பல உயிர்களை இழந்து வருவதை கண்ட தமிழக அரசு இன்னுயிர் காப்போம் திட்டத்தை கடந்த சில வாரங்களுக்கு முன் முதல்வர் முக ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
இத்திட்டத்தில் கடந்த ஆறு நாட்களில் 971 நபர் 609 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உடனடியாக இத்திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று உயிரிழப்பு பெருமளவு குறைந்துள்ளது.
தற்போது இதை கண்ட முதல்வர் 609 மருத்துவமனைகளில் இருந்து தற்போது 800 க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் இத்திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறலாம் என அறிவித்துள்ளது பெரும் மகிழ்ச்சி அளித்துள்ளது
இது மட்டுமில்லாமல் விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் இத்திட்டத்தின்கீழ் சேர்க்கும் நபர்களுக்கு ஊக்கத் தொகையாக ரூபாய் 5 ஆயிரம் வழங்கப்படுவதும் ஒரு சிறப்பாகும் எனவும் தெரிவித்தார்
இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து பொதுமக்களும் தமிழக அரசு அளிக்கும் அனைத்து மருத்துவ சேவைகளையும் பெற்று நலமுடன் வாழ வேண்டும் என இந்த அரசு இதனை செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ஆர்.கே.தேவேந்திரன், துணைத் தலைவர் சேகர், ஊராட்சி மன்ற தலைவர் கலையரசி கங்காதரன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊராட்சி மன்ற செயலர் ஜீவரத்தினம் என ஏராளமானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்..