சீயமங்கலத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
வாலாஜாபாத் அடுத்த சீயமங்கலம் பகுதியில் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை வருவாய்த்துறையினர் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டனர்.;
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பன்னீர்செல்வம் தலைமையிலான வருவாய்த்துறையினர் பல்வேறு இடங்களில் இருந்து கோடிக்கணக்கான மதிப்பில் நிலங்களை மீட்டு அரசு கணக்கில் கொண்டு வந்துள்ளனர்.
அவ்வகையில் வாலாஜாபாத் அடுத்த சீயமங்கலம் பகுதியில் பாலாற்று கரையோரம் உள்ள அரசு மேய்க்கால் புறம்போக்கு நிலம் 10 ஏக்கர் பரப்பளவில் பல்வேறு நபர்கள் குடிசைகள் வீடுகள் அமைத்து ஆக்கிரமிப்பு செய்திருந்தனர்.
இதுகுறித்து வட்டாட்சியர் லோகநாதன் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வத்திற்கு கோப்புகள் அனுப்பியதின் பேரில், இன்று வருவாய்த்துறை குழுவினர் வட்டாட்சியர் தலைமையில் ஜேசிபி இயந்திரங்கள் மற்றும் காவல்துறை உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தி மீட்டு வருகின்றனர்.
ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.10 கோடி என தெரியவருகிறது.