நள்ளிரவில் மேலாளாரை தாக்கி செல்போன், பணம்,நகை வழிப்பறி
நள்ளிரவு தனியார் தொழிற்சாலை மேலாளரை தாக்கி செல்போன், நகை, பணத்தை பறித்த மர்ம ஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர்.
காஞ்சிபுரம் அடுத்த சிங்கடிவக்கம் கிராமத்தில் இயங்கிவரும் தனியார் தொழிற்சாலையில் உற்பத்தி மற்றும் திட்டமிடல் பிரிவில் மேனேஜராக 12 ஆண்டுகளாக வேலை செய்பவர் குணசீலன் . இவர் காஞ்சிபுரத்தில் தங்கி உள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு பணி முடித்து இன்று அதிகாலை 5மணியளவில் தனது வீட்டிற்கு அவருடைய இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது சிங்கடிவக்கம் ஏரிக்கரை அருகே அடையாளம் தெரியாத நான்கு நபர்கள் அவரை வழி மடக்கியுள்ளனர்.
திடிரென கட்டையால் அவரை சரமாரியாக தாக்கியதும் சற்று நிலை தடுமாற்றத்தை சாதகமாக்கி அவரிடம் இருந்து செல்போன் , ரூபாய் 3 ஆயிரம் மற்றும் கழுத்தில் அணிந்திருந்த ஒரு பவுன் சங்கிலி மூன்றையும் பறித்துச் மின்னல் வேகத்தில் தப்பி சென்றுள்ளனர்.
சிறுது நேரம் பின்பு தொழிற்சாலைக்கு திரும்பிவந்து தொழிற்சாலையில் இருந்த ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொண்டனர்.
இதில் அவருடைய வலது கை முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து முதலுதவி அளித்து குரோம்பேட்டை பார்வதி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
இது குறித்து வாலாஜாபாத் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
கடந்த ஒரு வார காலமாக காஞ்சிபுரம் புறநகர் பகுதியில் செயின் பறிப்பு மற்றும் வழிப்பறி அதிக அளவில் நடப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்