சுகாதார குடிநீர் வழங்க காலூர் கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை
சுகாதாரமான குடிநீர் வழங்க காலூர் கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.;
தமிழகத்தில் நவம்பர் 1ஆம் தேதி உள்ளாட்சி தினமாக கடந்த ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தினத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு கிராம வளர்ச்சி பணிகள் குறித்து பல்வேறு ஆலோசனைகள் பெறப்பட்டு அதன்படி கிராமங்கள் வளர்ச்சிப் பணிகள் நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்த வருடம் முதல் தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில் அனைத்து பகுதிகளிலும் கிராம சபை கூட்டங்கள் உள்ளாட்சி தினத்தன்று நடைபெறும் என முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிவித்தார்.
அவ்வகையில் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காலூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே உள்ள சேவை மைய வளாகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சகுந்தலா சங்கர் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
உள்ளாட்சி தினத்தன்று மேற்கொள்ள வேண்டிய தீர்மானங்கள் குறித்து அரசு வழிகாட்டுதலின்படி கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஜல் ஜீவன் திட்டம், கலைஞர் குடியிருப்பு திட்டம், மக்கள் இயக்க திட்டம் மற்றும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் ஆகியவற்றிற்கு குறித்து தீர்மானங்கள் ஊராட்சி மன்ற செயலாளர் சேகர் வாசிக்க தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மேலும் உள்ளாட்சி தினத்தில் சுகாதாரப் பணியாளர்கள் மகளிர் சுய உதவி குழுக்கள் கௌரவிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் சகுந்தலா சங்கர் பொதுமக்களிடம் கோரிக்கை இருப்பின் கிராம சபை கூட்டத்தில் தெரிவிக்கலாம் என அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து கிராம பெண்கள் ஒரு சேர கிராம குடிநீர் பாலாற்றிலிருந்து முறையாக வழங்கப்பட்டு வருவதாகவும் , தற்போது நீரின் தன்மை மாறி உப்பு நீராக வருவதால் உடல் உபாதைகள் ஏற்படும் என அச்சம் கொள்வதாகவும் வேறு நீர் வழி தடத்திலிருந்து புதிய ஆழ்துளை கிணறு அல்லது ஏற்கனவே உள்ள ஆழ்துளை கிணறுகளை மறுசீரமைப்பு சுகாதாரமான குடி நீர் வழங்க கோரிக்கை வைத்தனர்.
இதற்கு பதில் அளித்த ஊராட்சி மன்ற தலைவர் சகுந்தலா ஷங்கர் நமது கிராமத்தில் மொத்தம் 724 குடியிருப்புகளுக்கு ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருவதாகவும், பொது மக்களின் கோரிக்கையை ஏற்று அதற்கான பணிகள் செயல்படுத்தப்படும் என உறுதியளித்தார்.
மேலும் காலூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வேடல் பகுதியில் அமைந்துள்ள சமுதாயக் கூட்டத்தின் கட்டணம் ஆயிரம் குறைக்கப்பட்டு, தற்போது ஐந்தாயிரம் ரூபாய்க்கு வழங்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் அதனை தங்கள் இல்ல நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தி கிராம வருவாய்க்கு உதவ வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
மேலும் நம்ம ஊரு சூப்பர் திட்டத்தில் வீட்டு குப்பைகளை சாலையில் வீசாமல் அதற்கான ஊழியரிடம் நேரடியாக அளிக்க வேண்டும் எனவும் விதிமுறைகளை மீறினால் அபராதம் விதிக்க நேரிடும் எனவும் , தூய்மை கிராமம் என பெயர் எடுக்க அனைவரும் ஒருங்கிணையுமாறு கேட்டுக்கொண்டார