குடையில் கொரோனா விழிப்புணர்வு வாசகம் எழுதி கிராம வீதிகளில் ஆசிரியர்கள் ஊர்வலம்
உத்திரமேரூர் பெருநகர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் குடையில் கொரோனா விழிப்புணர்வு வாசகங்கள் எழுதி கிராமம் முழுவதும் ஊர்வலமாக சென்றனர்
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த பெரு நகரில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பல கிராமங்களில் இருந்து 1800 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கல்வி மட்டுமல்லாமல் அவர்களின் தனித் திறமையைக் கண்டு அவர்களை ஊக்கப்படுத்தி நல்வழிப் படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது கொரோனா மூன்றாவது அலை வர உள்ளதாக வந்த தகவலை ஒட்டி அக்கிராம பொதுமக்களுக்கு வித்தியாசமான விழிப்புணர்வு ஏற்படுத்த ஆசிரியர்களால் திட்டமிடப்பட்டது.
அதனடிப்படையில் தலைமையாசிரியர் மாலதி தலைமையில் ஆசிரியர்கள் 20க்கும் மேற்பட்டோர் கொரோனா விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட குடையுடன் கிராம வீதிகளில் வலம் வந்து கிராம மக்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தனர்.
இதுபோன்ற நடவடிக்கைகள் கிராம மக்களிடையே பெரும் வரவேற்பு ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், அனைவரையும் ஒரு நிமிடம் சிந்திக்கவும் வைத்தது