உத்திரமேரூர் அருகே தடையில்லா மின்சாரம் வழங்க புதிய வழித்தடம்
உத்திர மேரூர் அருகே 5 கிராம விவசாயிகள் பயன்பெறும் வகையில் புதிய வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது.;
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாகரல் கிராமத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு மின்சார வாரிய மின் பகிர்மானம் மற்றும் உற்பத்தி நிறுவனம் சார்பில் துணை மின் நிலையம் மூலம் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களுக்கு தடையில்லாமல் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் விவசாய பெருமக்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு ஒரே மின்தடத்தில் மின் இணைப்பு வழங்கப்படுவதால் குறைந்த மின்னழுத்தம் மற்றும் பல்வேறு காரணங்களால் மின்சாரம் தடைபடுவதாக புகார் தெரிவித்தனர்.
இதனை கருத்தில் கொண்டு காவாண்தண்டலம் , இளையனார் வேலூர் , வள்ளிமேடு , சித்தாத்தூர் ஆகிய கிராமங்களிலுள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் புதிய வழித்தடத்தினை இன்று உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் , காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், காஞ்சிபுரம் மின்சார வாரிய கூடுதல் தலைமை பொறியாளர் கே. சண்முகம் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
கிராமப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் திட்டம் செயல்படுவதாகவும் வீடு வணிகம் தொழிற்சாலை விவசாய நிலங்கள் என அனைத்தும் ஒரே மின் வழித்தடத்தில் செல்வதால் பல்வேறு பிரச்சனைகளை கருத்தில் கொண்டு தடையில்லா மின்சாரம் மற்றும் மின்னழுத்தம் மாறுபாடுன்றி வழங்க புதிய வழித்தடம் ஏற்படுத்தப்பட்டு இன்று முதல் செயல்படுவதாக மின்சாரம் வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதேபோல் ஏற்கனவே திருமுக்கூடல் தாமல் பகுதிகளில் விவசாயிகளின் நலன் கருதி இது போன்ற வழித்தடங்கள் அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள் ஆசூர் கன்னியப்பன் , பரசுராமன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் குமணன், இளையனார் வேலூர் ஊராட்சி மன்ற தலைவர் கமலக்கண்ணன், திமுக நிர்வாகி திருநாவுக்கரசு, செயற்பொறியாளர்பிரசாத் , உதவி செயற்பொறியாளர் சாகுல் அமீத், மாகரல் துணை மின் நிலைய பொறியாளர் செந்தில்குமார் உள்ளிட்ட கலந்து கொண்டனர்.