சாலையை சுரண்டாமல் புதிய சாலைபணி: காற்றில் பறந்த தலைமை செயலர் அறிவுரை
பழைய சாலையை சுரண்டாமல் புதிய சாலையமைக்கும் பணியில் ஈடுபட்டதை கேட்டதற்கு அதுபோல் போட்டால் ரோடு நிலைக்காது என பணியாளர்களின் அலட்சிய பதில்;
காவாந்தண்டலம் கிராம ஏரிக்கரை பகுதியில் பழைய சாலையை சுரண்டாமல் புதிய சாலை அமைக்கும் பணி.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டம், காவாந்தண்டலம் கிராமத்திலிருந்து வயலூர் கிராமம் வரை கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய சாலைப் பணி துவங்கபட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கிராமப்புற சாலைகளை மாநில சாலைகளோடு இணைக்கும் பொருட்டு இது போன்ற திட்டங்கள் நிறைவேற்றப் பட்டது.
இந்நிலையில் இச் சாலை பழுதடைந்து உள்ளதால் மீண்டும் புதுப்பித்து புதிய சாலை போடும் பணி இன்று துவங்கியது. தமிழக தலைமை செயலாளர் இறையன்பு கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சாலைப் பணிகள் குறித்து ஓர் சுற்றறிக்கை அனுப்பியிருந்தார்.
அதில் சாலைகளை சுரண்டாமல் புதிய சாலைப் பணி அமைக்கும் போது அதன் உயரம் அதிகரிப்பால் விவசாய நிலங்கள், வீடுகள் தாழ்வான நிலைக்கு செல்வதை தவிர்க்க சாலையை சுரண்டி புதிய சாலை அமைக்க வேண்டும் என அறிவுறுத்தி இருந்தார்.
இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த விவசாயி ஒருவர் சாலை பணி நடைபெற்று இருக்கும் இடத்தில் உள்ள ஒருவரிடம் உயர்நீதிமன்றம், தலைமை செயலாளர் அறிவுறுத்திய நிலையில் இது போன்ற செயல்களில் ஈடுபடலாமா என கேட்டபோது அது போன்று சாலை அமைத்தால் சாலை நீண்டநாள் நீடிக்காது என அலட்சியமாக பதில் கூறினர்.
மேலும் சாலை பணி நடைபெறும் நிலையில் அவ்வழியே வாகனங்கள் வந்துகொண்டே இருந்தது அதிர்ச்சியையும், இதனால் ஆங்காங்கே வாகனத்தால் சாலை விரிசல் ஏற்பட்டதை கண்டும் காணாமல் சாலை அமைத்துக் கொண்டிருந்தனர்.