புரட்டாசி மாதம் தொடங்கியது, பஜனை கோயிலில் , விஷேச பூஜைகள்
புரட்டாசி மாதப் பிறப்பையொட்டி அனைத்து கிராம பஜனை கோயில்களிலும் , ராமபிரானுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.;
புரட்டாசி மாதம் என்றாலே பெருமாளுக்கு மிகவும் உகந்த மாதம் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயமே.புரட்டாசி மாதம் தொடங்கிய நாள் முதலே பெருமாள் கோவிலில் சிறப்பான வழிபாடுகள் தொடங்க ஆரம்பித்துவிடும்.
அதிலும் குறிப்பாக இந்த மாதம் புரட்டாசி மாதமானது வெள்ளிக்கிழமை அன்று, திருவோண நட்சத்திரத்தில் பிறந்துள்ளது.
தாயாருக்கு அதாவது மகாலட்சுமி அன்னைக்கு உகந்த இந்த வெள்ளிக்கிழமை தினத்தில் புரட்டாசி மாதம் பிறப்பதால், நம்முடைய வீட்டில் பெருமாளையும் தாயாரையும் நினைத்து வழிபட்டால் செல்வம் நிலைத்து நிற்கும்.
புரட்டாசி மாதத்தில் அசைவ பிரியர்கள் கூட பெருமாளை வழிபட வேண்டி ஒரு மாதம் சைவ உணவையே உண்டு பெருமாளை சனிக்கிழமையில் தோறும் வணங்கி வருவார்.
இந்நிலையில் காஞ்சிபுரம் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள பஜனை கோயிலில் இன்று புரட்டாசி முதல் நாளையொட்டி சிறப்பு திருமஞ்சனம் நடைபெறுவது வழக்கம்.
அவ்வகையில் காஞ்சிபுரம் அடுத்த ஆர்ப்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள கோதண்ட ராமர் பஜனை கோயில் ராமபிரான் லட்சுமணன் சீதாபிராட்டி அனுமன் ஆகியோருக்கு பல்வேறு அபிஷேக பொருட்கள் கொண்டு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.
அதன் பின் துளசி மாலையுடன் ராமபிரான் சிறப்பு தீபாராதனை காட்சி அளித்தார். கலந்து கொண்ட பக்தர்களுக்கு சடாரி மற்றும் துளசி தீர்த்தம் வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு படைக்கப்பட்ட நைவேத்தியமான தயிர்சாதம் வழங்கப்பட்டது.