அண்ணனை கொலை செய்த தம்பி கைது உள்ளிட்ட காஞ்சிபுரம் மாவட்ட க்ரைம் செய்திகள்
அண்ணனை கொலை செய்த தம்பி கைது உள்ளிட்ட காஞ்சிபுரம் மாவட்ட க்ரைம் செய்திகள் இங்கே பதிவிடப்பட்டுள்ளன.;
வாலாஜாபாத் அருகே கருக்கு பேட்டை பகுதியில் குடும்பத்தகராறு காரணமாக குடிபோதையில் சகோதரர்களுக்குள் ஏற்பட்ட சண்டையில் கோபத்தில் கட்டையால் அடித்து அண்ணனை கொலைசெய்த தம்பியை வாலாஜாபாத் போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே திம்மையன்பேட்டை ஊராட்சி கீழ் தெருவில் வசிப்பவர் வடிவேலு. இவரது அண்ணன் சரவணன் திருமணம் ஆன நிலையில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வாலாஜாபாத் பகுதியில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் சரவணன் அடிக்கடி குடித்துவிட்டு தம்பி வடிவேலு வீட்டுக்கு சென்று தகராறு செய்து உள்ளார். இன்றும் குடிபோதையில் தகராறு முற்றிய நிலையில் கைகலப்பாக மாறியது.
கைகலப்பில் சரவணன் தம்பி வடிவேலுவின் கையை கடித்து விட்டதால் கோபமடைந்த வடிவேலு அருகில் இருந்த கட்டையை எடுத்து சரமாரியாக தாக்கி உள்ளார்.படுகாயம் அடைந்த சரவணன் ரத்த வெள்ளத்தில் வீட்டிலேயே துடி துடித்து உயிரிழந்து உள்ளார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த வாலாஜாபாத் போலீசார் உயிரிழந்த சரவணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கட்டையால் அடித்து கொலை செய்த தம்பி வடிவேலுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.குடிபோதை தகராறு காரணமாக கோபத்தில் தம்பியே அண்ணனை அடித்து கொலை செய்த சம்பவம் வாலாஜாபாத் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதே போல் காஞ்சிபுரம் அடுத்த களக்காட்டூர் பகுதியில் திருவிழாவில் அமைக்கப்பட்ட ஜெனரேட்டரில் சிறுமியின் தலைமுடி சிக்கி பலத்த காயங்களுடன் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
வாலாஜாபாத் தாலுகா, களக்காட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சரவணன் என்பவரின் மகள் லாவண்யா - 7 ஆம் வகுப்பு படித்து வந்தாள்.
நேற்று இரவு விச்சந்தாங்கள் கிராமத்தில் நடைபெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் திருவிழா வீதிஉலாவின் போது மின் அலங்காரத்திற்காக அமைக்கப்பட்ட ஜெனரேட்டரில் மேற்படி லாவண்யாவின் தலைமுடி சிக்கி கொண்டது.
இதில் லாவண்யா தலையில் ரத்த காயம் ஏற்பட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் லாவண்யா சிகிச்சை பலனின்றி அதிகாலை 1 மணிக்கு இறந்துவிட்டார்.
அவரது உடலை கைப்பற்றி மாகரல் காவல்துறையினர் உடற்கூறு ஆய்விற்காக காஞ்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வழக்கு பதியப்பட்டு விசாரணை மேற்கொண்டு அதன் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.