இடி தாக்கியதால் கோயில் கலசம் சேதம். 3 பசு மாடுகள் உயிரிழப்பு.
வாலாஜாபாத் பகுதியில் இடி தாக்கியதில் இளையனார்வேலூர் முருகன் கோயில் ராஜகோபுர கலசம் மற்றும் மஞ்சமேடு பகுதியில் மேய்ச்சலில் இருந்த 3 மாடுகள் மீது மின்சாரம் தாக்கி பலி.;
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை தொடர்ந்து வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக கடந்த இரண்டு நாட்களாக காஞ்சிபுரம் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 11 தினங்களாக காஞ்சிபுரத்தில் 213 மில்லி மீட்டர் ஸ்ரீபெரும்புதூரில் 232 மில்லி மீட்டர் உத்தரமேரூரில் 218 மில்லி மீட்டர் வாலாஜாபாத்தில் 161 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு முதலே தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. காலை 8 மணி அளவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளின் கூடிய பலத்த மழை பெய்தது.
வாலாஜாபாத் எடுத்த இளைஞனார் வேலூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பாலசுப்பிரமணியர் திருக்கோயில் ஐந்து நிலை ராஜகோபுரம் அமைந்துள்ளது. இந்த ராஜகோபுரத்தின் மேல் பகுதியில் ஏழு கலசங்கள் அமைக்கப்பட்டு ராஜகோபுரம் அமைந்துள்ளது. இன்று காலை 8:15 மணியளவில் அப்பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வந்த நிலையில் திடீரென இடி ராஜ கோபுர ஐந்தாவது கலசத்தில் தாக்கி உள்ளது.
இதனால் கலசம் அதன் இடத்திலிருந்து சாய்ந்து மற்றொரு கலசத்தின் மேல் விழுந்துள்ளது. பெரும் அதிர்வு கண்ட கோயிலின் அர்ச்சகர் ரவி உடனடியாக வந்து பார்த்தபோது ராஜகோபர கலசம் சாய்ந்திருப்பதைக் கண்டு ஊராட்சி மன்ற தலைவர் கமலக்கண்ணிடம் தெரிவித்ததின் பேரில் அவர் வருவாய்த்துறை மற்றும் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
இதேபோல், வாலாஜாபாத் அடுத்த தென்னேரி கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக்குமார் (45) இவர் பால் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல தனது இரண்டு கறவை பசு மாடுகளை மேய்ச்சலுக்காக அருகாமையில் உள்ள மஞ்சமேடு கிராம வயல்வெளி பகுதிக்கு மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்றுள்ளார் . அங்கு வயல்வெளியில் ஏற்கனவே மழையால் மின் ஒயர் அருந்து விழுந்துள்ளன. இதனை பசுமாடுகள் எதிர்பாராத விதமாக மிதித்த நிலையில் சம்பவ இடத்திலேயே மயங்கின.
இதேபோல் தென்னேரி கிராமத்தை சேர்த்த கல்பனா என்பவரின் ஒரு கறவை மாடும் பின் தொடர்ந்து வந்து மின் ஒயரில் பட்டு மயக்கம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.
இது குறித்து தகவல் அறிந்த வாலாஜாபாத் காவல்துறை மற்றும் வருவாய் துறையினர், கால்நடை துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அறுந்து விழுந்த மின் ஒயரின் மின்சாரத்தை துண்டித்து இறந்த கால்நடைகளை பிரேத பரிசோதனை செய்து வயல்வெளி பகுதியில் ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோன்றிய புதைத்தனர். மேலும் இது குறித்து வாலாஜாபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மழைக்காலங்களில் இப்பகுதியில் கால்நடை மேய்ச்சலுக்காக வழக்கம் போல் செல்லும் நிலையில், இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுவது தொடர்ச்சியாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.