கனமழையால் உள்வாங்கிய நடைபாதை: தரமற்ற பணிகளால் பல லட்சம் வீண்
அய்யம்பேட்டையில் ஊராட்சியில் தரமற்ற பணிகளால் குளத்தின் நடைபாதை உள்வாங்கியதால் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதிக்குபட்ட ஐயம்பேட்டை ஊராட்சி மாநில சாலையோரம் அமைந்துள்ள குளத்தை புணரமைக்க காஞ்சிபுரம் ஊராட்சி முகமை சார்பில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் 2020-2021 கீழ் ரூ.21.37 லட்சம் மதிப்பில் புணரமைக்க திட்டமிட்டு பணிகள் நடைபெற்றது.
குளத்தை சுற்றி பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள பவர் பிளாக் நடைபாதை, குளத்தை ஆழப்படுத்தும், காம்பவுண்ட் வேலி உள்ளிட்ட பணிகள் நடைபெற்றது.
குறுகிய சில மாதங்களிலேயே தரமற்ற பணிகளால் கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழை காரணமாக நடைபாதை உள்வாங்கி கான்கீரிட் சுவர் விரிசல் அடைந்தது.
இதனைக்கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பணிகளை முறையாக கவனிக்காததால் ஊராட்சி முகமைக்கு பெருத்த பண விரயமும், பொதுமக்களிடையே அவப்பெயரும் ஏற்பட்டுள்ளது. இக்குளம் ஏற்கனவே 2019 குடிமராமரத்து பணியின் கீழ் பல ஆயிரம் செலவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.