கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1.50 லட்சம் கல்வி உதவி: எம்.எல்.ஏ வழங்கினார்
ஏழை மாணவி ஒருவரின் கல்வி கட்டணத்தை தான் ஏற்றுக்கொள்வதாக, உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் அறிவித்தார்.;
காஞ்சிபுரம் மாவட்டம் , ஆற்பாக்கம் கிராமத்தில் சிவகாமி அம்மாள் அறக்கட்டளை சார்பில் 2019ல் கிராம்புற ஏழை மாணவிகள், உயர்கல்வி முன்னேற்றத்தை அடையும் நோக்கில் 5ஏக்கர் பரப்பளவில் சென்னை பல்கலைக் கழக ஒப்புதலுடன், ஐந்து பாடப்பிரிவுகளுடன் ஸ்ரீ மகாலட்சுமி மகளிர் கலை & அறிவியல் கலை கல்லூரி துவக்கப்பட்டது.
இக்கல்லூரியின் ஆண்டுவிழா மற்றும் மாணவிகளுக்கான கல்வி உதவித் தொகை வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் கல்லூரி நிர்வாக அறங்காவலர் எஸ்.மீனாட்சி சுந்தரம் தலைமையில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் டாக்டர்.எஸ்.கவிதா ஆண்டறிக்கை வாசித்தார். இதில் சிறப்பு விருந்தினராக உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
ஏழை எளிய கிராமப்புற மாணவிகளின் உயர்கல்வி கணவை இக்கல்லூரி நிறைவேற்றி வருகிறது. மேலும் தற்போதைய வளர்ச்சியை கருத்தில் கொண்டு புதிய வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் பாடபிரிவுகளை கொண்டு வரவேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும் இங்கு பயிலும் ஏழை மாணவியின் மூன்றாண்டு கல்வி கட்டணத்தை தான் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார். இதன்பின் கல்லூரி அறக்கட்டளை சார்பில் 29 மாணவிகளுக்கு சுமார் ரூ1.50 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித் தொகைகளை மாணவிகளுக்கு வழங்கி வாழ்த்துரை தந்தார்.
இக்கல்லூரி நிர்வாக அறங்காவலர் மீனாட்சி சுந்தரம் கூறுகையில், கல்லூரியில் தற்போது 85 மாணவிகள் பயின்று வருவதாகவும், அனைவரும் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் கல்வி பயிலும் காலங்களிலே வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில், கல்லூரியில் இலவச டிஎன்பிசி வகுப்புகள் நடைபெறுகிறது என தெரிவித்தார்.
ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மலர்கொடி குமார், துணைத்தலைவர் திவ்யபிரியா இளமதி, ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.குமார், குமணன், கவுன்சிலர் கி.பரசுராமன், ஊராட்சி மன்ற தலைவர் ரா.செல்வி, கல்லூரி நிர்வாக இயக்குநர்கள், மாணவிகள், பெற்றோர்என பலர் கலந்து கொண்டனர்.