ராகுல்காந்திக்கு சிறைத்தண்டனை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

ராகுல்காந்திக்கு சிறைத்தண்டனை கண்டித்து காஞ்சிபுரத்தில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.;

Update: 2023-03-23 10:52 GMT
காஞ்சிபுரத்தில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ராகுல்காந்திக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து காஞ்சிபுரத்தில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

இந்தியாவில் கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற்றது. கர்நாடக மாநிலம் , கோலாரில் நடந்த பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.

இந்த பிரச்சாரத்தில் பேசிய ராகுல் காந்தி, "நிரவ் மோடி, லலித் மோடி அல்லது நரேந்திர மோடி என மோடி பெயர் வைத்துள்ளவர்கள் எல்லாம் திருடர்களாக இருக்கிறார்கள்" என பேசியுள்ளார்.

இது தொடர்பாக குஜராத் பா.ஜ.க எம்.எல்.ஏ. புர்னேஷ், மோடி பற்றி ராகுல் காந்தி பேசியது குறித்து சூரத் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.இந்த வழக்கின் இறுதி வாதங்கள் கடந்த வெள்ளியன்று நடந்து முடிந்துள்ளது.

இதையடுத்து இன்று இந்த வழக்கில் சூரத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதில், மோடி பெயர் குறித்து அவதூறாகப் பேசிய ராகுல் காந்தி குற்றவாளி என்றும் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் சூரத் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அதோடு ராகுல்காந்திக்குப் பிணை வழங்கியது. நீதிமன்றத்தில் ரூ 15,000 பிணைத் தொகை செலுத்தி ராகுல் காந்தி ஜாமீன் பெற நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை கண்டித்து காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் இந்தியா முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் அளவு நாகராஜன், காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகே மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்களை வாலாஜாபாத் காவல் துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.

இதேபோல் காஞ்சிபுரம் , ஸ்ரீபெரும்புதூர்,  படப்பை ,  உத்திரமேரூர் ஆகிய இடங்களிலும் காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசிற்கு எதிரான கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

Similar News