கோவையை சேர்ந்த பெண்ணை கணவன் வீட்டார் கொலை செய்ததாக புகார்
கோவை பெண்ணை வாலாஜாபாத் அருகே கணவன் குடும்பத்தினர் தீ வைத்து கொலை செய்ததாக புகார் செய்யப்பட்டுள்ளது.;
கோவை , கவுண்டம்பாளையம் , ரஞ்சப்ப கவுண்டர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவருக்கு மூன்று மகள்கள் இருந்த நிலையில் இவரது டிப்ளமோ பட்டதாரியான இரண்டாவது மகளான சூர்யாவிற்கும் வாலாஜாபாத் அடுத்த கண்ணடியன் குடிசை பகுதியை சேர்ந்த பூபாலன் மகன் ரஞ்சித் குமார் என்பவருக்கும் கடந்த 2016 இல் திருமணம் நடைபெற்றது.
ரஞ்சித் குமார் வாலாஜாபாத் பகுதியில் துணிக்கடை நடத்தி தனது தந்தை தாய் மற்றும் தம்பியுடன் வசித்து வருகிறார் . கடந்த 19ஆம் தேதி திடீரென சூர்யா தீக்குளித்து இறந்து விட்டதாக அவரது தந்தை ரவிச்சந்திரனுக்கு பூபாலன் தகவல் தெரிவித்துள்ளார்.
அதிர்ச்சி அடைந்து உறவினர்கள் மற்றும் குடும்பத்துடன் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு வந்து பார்த்தபோது உடல் முழுவதும் தீக்காயங்கள் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த ரவிச்சந்திரன் மாகரல் காவல் நிலையத்தில் தனது மகள் இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும், அவரது கணவர் ரஞ்சித்குமார் , மாமனார் பூபாலன் , மாமியார் விஜயலட்சுமி ஆகியோர் இணைந்து தீயிட்டு கொளுத்தியுள்ளதாக தனது புகார் மனுவில் தெரிவித்ததன் பேரில் மாபெரும் காவல் நிலைய துணை ஆய்வாளர் சந்திரசேகரன் புகாரினை பெற்றுக்கொண்டு 174 class 3 ன் கீழ் வழக்கு பதிவு செய்து, திருமணம் ஆகி 5 வருடங்கள் ஆகிய நிலையில் உள்ளதால் காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொள்ள வேண்டுகோள் விடுத்து இருந்தார்.
இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி மருத்துவமனையில் சூர்யாவின் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டார் . அதன் பின் அவரது கணவர் ரஞ்சித் குமார் அவரது பெற்றோர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் சூர்யாவின் உடல் கன்னடியன்குடிசை பாலாற்று கரையில் அடக்கம் செய்யப்பட்டது. உடல் அடக்கம் செய்யப்படும் வரை மாகரல் காவல்துறையினர் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்தனர்.
மகள் மரணம் குறித்து அவரது தந்தை ரவிச்சந்திரன் கூறுகையில் , திருமணம் ஆகி முதல் குழந்தை வரை மகிழ்ச்சியுடன் இருந்த நிலையில் அதன்பின் சிறிது சிறிதாக எனது மகளை டார்ச்சர் செய்து வந்துள்ளதாகவும் தனது மகள் திருமணத்திற்கு பிறகு இருமுறை மட்டுமே கோயம்புத்தூருக்கு வந்துள்ளதாகவும், சில வாரங்களுக்கு முன்பு மன வருத்தத்துடன் போன் செய்ததாகவும் அதன் பின் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. நாங்கள் வந்தாலும் எங்களுடன் சண்டையிடுவதிலேயே ரஞ்சித் குமார் மற்றும் அவர்களை பெற்றோர்கள் ஈடுபடுவதும் அவமானப்படுத்துவதாக அவர்கள் செய்கை இருந்தது. எனது மகள் தீயிட்டு கொளுத்திக் கொள்ளும் மனநிலை உடையவர் அல்ல என்பதும் இவர்கள் அனைவரும் இணைந்து எனது மகளை கொன்று விட்டார்கள் என வருத்தத்துடன் தெரிவித்தார்.
சூர்யாவின் இறுதி சடங்கில் இரு வீட்டார் மற்றும் அந்த கிராம மக்களில் சிலர் மட்டுமே கலந்து கொண்டதும் பல சந்தேகங்களை போலீசாருக்கு ஏற்படுத்தி உள்ளது.