உத்திரமேரூர் தொண்டு நிறுவனத்தின் குழந்தைகள் காப்பகத்தில் 43பேருக்கு கொரோனா
உத்திரமேரூர் அருகே தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடத்தப்படும் சிறுவர் இல்லத்தில் 43 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.;
காஞ்சிபுரம் மாவட்டம் , உத்தரமேரூர் அடுத்த களியாம்பூண்டி கிராமத்தில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் சிறுவர் இல்லம் அரசு அனுமதியுடன் நடத்தப்பட்டு வருகிறது.
இங்கு ஆண் மற்றும் பெண் சிறுவர்கள் என மொத்தம் 76 நபர்கள் தங்கியுள்ளனர். இரு தினங்களுக்கு முன்பு இங்கு நான்கு சிறுமியர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா பரிசோதனை நடைபெற்றது.
இதில் நான்கு பேர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவருடன் இருந்த 76 நபர்களுக்கும் மற்றும் அலுவலக உதவியாளர்கள் என அனைவருக்கும் சிறப்பு பரிசோதனை நடத்தப்பட்டது. அதன் முடிவுகளின் படி 36 நபர்களுக்கும், 7அலுவலக ஊழியர்களுக்கும் என 43 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதை அடுத்து தொற்று உறுதியான அவர்கள் அனைவரும் 6 சிறப்பு 108 வாகனங்கள் மூலம் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை சிறப்பு பிரிவுக்கு அழைத்து வரப்பட்டு தற்போது பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மீதம் உள்ள அனைவரும் அங்கு தனிமைப்படுத்தப்பட்டு இல்லம் முழுதும் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது