அரசு கொள்முதல் செய்த 8 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழையால், அரசால் கொள்முதல் செய்யப்பட்ட 8000 நெல் மூட்டைகள், அதிகாரிகளின் அலட்சியத்தால் மழையில் நனைத்து சேதமடைந்தது.
காஞ்சிபுரம் , செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கடந்த ஒருவார காலமாகவே வானிலை மாற்றம் காரணமாக மாலை நேரங்களில் கன மழை பெய்து வருகிறது. நேற்று மாலை துவங்கிய மழை அதிகாலை வரை நீடித்தது.
இந்நிலையில் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிக விளைச்சல் காரணமாக பல்வேறு இடங்களில் நேரடி நெல் கொள்முதல் செயல்பட்டது. அங்கு கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் நெல்வாய் என்ற பகுதியில் ஒருங்கிணைக்கப்பட்டு அங்கிருந்து அறவை நிலையங்களுக்கு செல்லும் நிலை உருவாகியது.
இங்கு கடந்த காலங்களில் கொள்முதல் செய்யப்பட்ட 8000 மூட்டைகள் நேற்று பெய்த கனமழையால் அனைத்தும் நனைந்து வீணாகியது.,
கடந்த சில தினங்களாக மழை வருவது தெரிந்ததும் அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் சரிவர எடுக்காததால் அனைத்தும் நனைந்து அரசுக்கு வருவாய் இழப்பு மட்டுமல்லாமல் தரமற்ற பொருட்களை உற்பத்தி செய்யும் நிலைக்கு தற்போது தள்ளப்பட்டுள்ளது.
அரசு அதிகாரிகளின் இச்செயல் விவசாயிகள் இடையே பெருத்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இனிவரும் காலங்களிலாவது அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என விவசாயிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.