ரூ 1கோடி நிலம் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையிலான குழு மீட்பு
காஞ்சிபுரம் அருகே சீயட்டிகாரை கிராமத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த 1 கோடி மதிப்பிலான குளம் புறம்போக்கினை மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான குழுவினர் மீட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் , வாலாஜாபாத் வட்டத்திற்கு உட்பட்ட சீயட்டி காரை கிராமத்தில் அரசுக்கு சொந்தமான சர்வே எண் 106 /1 ல் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் குளம் புறம்போக்கு இருந்து வந்தது.
இதனை அக்கிராமத்தை சேர்ந்த தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து குளத்தை மூடி விவசாய நிலமாக சமன்செய்து பயிர் செய்து வந்தார்.
இந்நிலையில் தமிழக முதல்வரின் அறிவுரையின் படி காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை கண்டறித்து மீட்க மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தினார்.
அவ்வகையில் சீயட்டிகாரை கிராமத்திலிருந்த குளம் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு இருந்ததைக் கண்டறிந்து இன்று மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையிலான வருவாய்த்துறையினர் மூன்று ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன் சமன் செய்து இருந்த நிலத்தை மீண்டும் குளமாக மாற்றும் பணியை துவங்கினர்
இப்பணியினை காஞ்சிபுரம் வருவாய்க் கோட்டாட்சியர் ராஜலட்சுமி, வட்டாட்சியர் காமாட்சி மற்றும் வருவாய்துறையினர் தொடர் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இப்பணியின் போது அப்பகுதியை சேர்ந்த நபரொருவர் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
அந்நபர் குறித்து விசாரிக்கையில் , ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா வட்டத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருவதாகவும் தெரியவந்துள்ளது. வருவாய்த்துறை பணியில் உள்ள நபர் உயர் அலுவலர்களை அவதூறாக பேசியது சர்ச்சையை எழுப்பியுள்ளது.