உத்திரமேரூர் அருகே ஒரு ஏரிக்கு இரண்டு அரசுதுறைகள் போட்டி போடுவதால் பொதுமக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் , உத்திரமேரூர் வட்டம் , அழிசூர் கிராமத்தில் அரசேரி மற்றும் பெரிய ஏரி என இரண்டு ஏரிகள் உள்ளது. இந்த ஏரிகளில் மீன் மச்ச மகசூல் சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக அறநிலையதுறை அதிகாரிகள் மூலமாக ஏலம் விடப்பட்டு பொதுமக்கள் ஏலம் எடுத்து ஏல தொகையை இந்து சமய அறநிலையத்துறையிடம் செலுத்தி ரசீது பெற்று வந்தனர்.இந்நிலையில் தற்போது பொதுப்பணித்துறை மூலமாக இந்த இரண்டு ஏரிகளிலும் எங்களுக்கு உரிமை உள்ளது என்று அவர்களும் சொந்தம் கொண்டாடி ஆறு மாத கால குத்தகைக்கு விடுவதாக ஊராட்சி அலுவலக பலகையில் விளம்பரப்படுத்தி உள்ளனர்.
இதைக்கண்ட கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்து இது குறித்து அறநிலையத் துறை அதிகாரியிடம் கேட்டபோது பல ஆண்டுகளாக இந்து சமய அறநிலையத் துறையிடம் இந்த ஏரி குத்தகைத் தொகை செலுத்தி பெற்று வருவதால் இதே நடைமுறையை பின்பற்றுவோம் என கிராம மக்களுக்கு அறிவுரை வழங்கினர். ஆனால் பொதுப்பணித்துறை அதிகாரியோ, எங்களுக்குத்தான் ஏரி சொந்தம் எனக்கூறி எங்களிடம் தான் ஏரி குத்தகை செலுத்த வேண்டும் என கூறுவதால் பொதுமக்கள் குழப்பம் அடைந்து மாவட்ட ஆட்சியரிடம், யாரிடம் ஏரிக்கான பணம் செலுத்துவது என்று கூற கோரி இன்று மனு அளித்தனர்.