கல்குவாரியில் மண் சரிவு, ஒருவர் பலி - இருவர் காயம்

Update: 2021-02-04 11:30 GMT

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் கல்குவாரியில் மண்சரிந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டம் , மதூர் கிராமத்தில் முத்து என்பவருக்கு சொந்தமான கல் குவாரி இயங்கி வருகிறது. இந்நிலையில் வழக்கம் போல் இன்று கல் குவாரியில் பணியை ஊழியர்கள் துவங்கினர். ஆனால் திடீரென குவாரியில் மேலிருந்து திடீர் மண்சரிவு மற்றும் பார்வை வெடிப்புகள் ஏற்பட்டு 200 அடி ஆழத்தில் பணி செய்து தொழிலாளிகள் மீது விழுந்ததில் மணிகண்டன் என்ற தொழிலாளி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். சோனா அன்சாரி மற்றும் சுரேஷ் என்ற இரு தொழிலாளிகள் காயங்களுடன் மீட்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இடிபாடுகளுக்கிடையே தொழிலாளிகள் எவரேனும் உள்ளனரா என கண்டறியும் பணியில் தீயணைப்பு துறையினர் காவல் துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆய்ஙவு மேற்கொண்டதில் எவரும் இல்லை என தெரிய வந்தது. சம்பவ இடத்திற்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி , டிஜிபி சைலேந்திரபாபு , மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் மற்றும் தீயணைப்பு துறையினர், காவல்துறையினர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி கூறுகையில் இந்த குவாரி அரசு அனுமதி பெற்று இயங்கி வருவதாகவும் ஒரு தொழிலாளி இறந்துள்ளதாகவும் , இருவர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறினார். மேலும் மற்ற தொழிலாளிகள் அனைவரும் பத்திரமாக உள்ளதாகவும் இருப்பினும் வேறு யாரேனும் இடிபாடுகளில் சிக்கி உள்ளனரா என கண்டறிய மாநில பேரிடர் குழுவை சேர்ந்த 44 பேர் சம்பவ இடத்துக்கு விரைந்து வருவதாகவும் , மீட்புப் பணிகள் முறையாக நடைபெறும் எனவும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்படும் குவாரிகள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

Tags:    

Similar News