நீங்க தான் முதல் குற்றவாளி.. மாசுக்கட்டுப்பாட்டு அலுவலகத்தில் அளித்த மனுவால் பரபரப்பு
நீங்கள் தான் முதல் குற்றவாளி என மாசுக்கட்டுப்பாட்டு அலுவலகத்தில் அளித்த மனுவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.;
ஒரகடம் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் மற்றும் நிர்வாகிகள் இன்று மனு அளித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டங்களில் செயல்பட்டுவரும் எண்ணற்ற தரமற்ற எம் சாண்ட் (M Sand) உற்பத்தி நிறுவனங்களுக்கு அனுமதி அளித்த தங்களின் மீது முதல் குற்றவாளியாக காவல் நிலையத்தில் புகார் அளித்து ஏன் சட்ட நடவடிக்கை எடுக்கக் கூடாது என வினா கோரிக்கை மனு அளித்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டம், ஒரகடம் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் மற்றும் நிர்வாகிகள் இன்று மனு அளித்தனர்.
அம்மனுவில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் ஏறத்தாழ 176 எம் சாண்ட் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன என்பது யாவரும் அறிந்ததே. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமார் 25 எம் சாண்ட் (M Sand) உற்பத்தி நிறுவனங்கள் மட்டுமே 30.06.2021 வரை தமிழ்நாடு அரசு முறையான அனுமதி பெற்று சான்றிதழ் உடன் இயங்கி வருகிறது என்பது அரசு பதிவில் உள்ளது.
மற்றபடி மீதமுள்ள 150க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் எவ்வித அனுமதியும் இன்றி குவாரி Dustல் தண்ணீர பிடித்து எம் சாண்ட் (M Sand) என்ற பெயரில் தரமற்ற பொருட்களை வியாபாரம் செய்து வருகின்றனர்.
அருகிலுள்ள தலைநகர் சென்னை மற்றும் அருகிலுள்ள சில இடங்களில் நடக்கும் கட்டுமான பணிகளுக்கு நாள் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 1000 லோடு எம் சாண்ட் (M Send) தேவை என்பதை கட்டுமான வல்லுனர்களின் புள்ளிவிவரங்கள் கூறுகிறது.
ஆகவே சென்னைக்கு அருகாமையில் இருக்கும் செங்கல்பட்டு. காஞ்சிபுரத்தில் இருந்தே தேவையை பூர்த்தி செய்ய நேரிடுகிறது. இதில் பல்வேறு இடங்களில் அதாவது கிரஷர்களில் இருந்து விற்பனையாகும் தரமற்ற எம் சாண்டினால்தான் பலதரப்பட்ட அரசு கட்டிடங்கள், பாலங்கள், கால்வாய்கள், குடிசை மாற்று கட்டிடங்கள் மற்றும் தனியார் கட்டிடங்கள் என ஏராளமானகட்டிடங்கள் இடிந்து விழுந்து வருவதை நாளேடுகளிலும் ஊடகங்களிலும் பார்த்து வருகிறோம்.
இதனை கண்டித்து நாங்கள் பலமுறை அரசுக்கு கடிதம் கொடுத்தும் பல்வேறுகட்ட போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் என நடத்தி அரசின் கவனத்தை ஈர்த்தது எதிரொலியாகதான் தற்போது தமிழ்நாடு அரசு கடந்த பத்து தினங்களுக்கு முன்பு கிரஷர் குவாரிகளுக்கு இனிமேல் குத்தகை கிடையாது என்றும், அதிகாரிகளின் குழுக்கள் கிரஷர் குவாரிகளை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அரசு கொள்கை முடிவை வெளியிட்டது.
தமிழ்நாடு அரசு தரமற்ற எம்சாண்ட் உற்பத்திக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என கொள்கை முடிவை எடுத்தும் கூட மிக பெரிய பதவியில் இருக்கும் தாங்கள் இதற்கான எந்த பணியையும் மேற்கொள்ளவில்லை.
ஏற்கனவே நடந்த கட்டிட இடிபாடுகளுக்கு தாங்கள்தான் முழு பொறுப்பு என்றும், நடந்த உயிர் சேதங்களுக்கு தாங்கள்தான் காரணம் என்றும் தாங்கள் தங்களின் கடமையை செய்ய தவறிய காரணத்தினால் தான் இவ்வளவு அசம்பாவிதங்கள் நடந்தது எனவும், மக்கள் நலனில் அக்கறை கொண்ட இந்த அரசுக்கு ஊறு விளைவிக்க கூடிய வகையிலும் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கக் கூடிய வகையிலும் மெத்தனப் போக்கில் செயல்படும் தங்களின் மீது எங்களுக்கு பெரிய சந்தேகம் எழுந்துள்ளது.
தாங்களும் இந்த மாவட்டங்களில் நடக்கும் கொள்ளைக்கும் தரமற்ற எம் சாண்ட் உற்பத்திக்கு துணையோ என்றும், இதில் தங்களின் சுயலாபம் ஏதும் உள்ளதோ என்றும், நடக்கும் முறைகேடுகளில் தங்களின் ஏதோ பங்கு உண்டோ என்றும், கரை புரண்டு ஓடும் லஞ்ச லாவண்யத்தில் தங்களுக்கு எவ்வளவு சேர்ந்தடைந்தது என்ற பெருத்த சந்தேகம் எழுந்தது.
ஆகவே இது போன்ற கடமையும் பொறுப்பும் உள்ள தங்களின் மெத்தனப் போக்கை பார்க்கும் போது தாங்கள் இந்த இருக்கைக்கு தகுதியற்றவர் என்றும் இவ்வளவு கட்டிட இடிபாடுகளுக்கும் உயிர் சேதங்களுக்கும் தாங்களே முதல் காரணம் என்றும் முதல் குற்றவாளி என்றும் காவல் நிலையத்தில் தாங்கள் மீது புகார் அளித்து சட்ட நடவடிக்கை ஏன் எடுக்கக் கூடாது என்றும் தங்களை கண்டித்து லாரி உரிமையாளர்கள், வணிகர்கள், கட்டுமான பொறியாளர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைவரையும் ஒன்று திரட்டி ஏன் படப்பை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு கண்டன ஆர்ப்பாட்டமும், தங்கள் அலுவலகத்தை முற்றுகையிடும் முற்றுகைப் போராட்டமும் நடத்தக்கூடாது.
ஆகவே தாங்கள் துரித நடவடிக்கை எடுத்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனுமதி இல்லாமல் இயங்கி வரும் 150க்கும் மேற்பட்ட கிரஷர்களை உடனடியாக நிறுத்தி ஆய்வு செய்தபிறகு அவர்களுக்கு முறையான அனுமதி அளித்து தரமான எம் சாண்ட் தயாரிக்க அனுமதி அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் என அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாவட்ட தலைமை அதிகாரியே முதல் குற்றவாளியாக ஏன் சேர்க்க கூடாது என அவர்கள் அலுவலகத்திலேயே மனு அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.