இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீபெரும்புதூரில் மீண்டும் தேரோட்டம்

ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் திருத்தேர் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

Update: 2022-04-22 05:04 GMT

 ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேரோட்ட திருவிழாவில் பக்தர்கள் ஏரளமோனர் வடம் இழுத்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் சுமார் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்கோவிலாக விளங்கி வருவது பிரசித்தி பெற்ற ஸ்ரீஆதிகேசவ பெருமாள் திருக்கோயில்.  இந்த திருக்கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகவும் இருந்து வருகிறது.

வைணவ சமயத்தை தோற்றுவித்த மதங்களில் புரட்சி செய்த மகான் ஸ்ரீமத் ராமானுஜர் அவதரித்ததும் இந்த ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் தான் என்பது வரலாறுகள் தெரிவிக்கின்றன. இங்கு சித்திரை திருவிழாவில் ஆதிகேசவ பெருமாளுக்கு என்னென்ன உற்சவங்கள் நடைபெறுகிறதோ அதே போல் ராமானுஜருக்கும் நடைபெறுவது வழக்கம். இதனால் ஆதிகேசவ பெருமாளுக்கு 10 நாட்கள் உற்சவமும், ராமானுஜருக்கு அவதார விழா என்று 10 நாட்கள் உற்சவமும் தனித்தனியாக நடைபெறும். இதனாலே ஆதிகேசவ பெருமாளை பெரியவர் என்றும் ராமானுஜரை சிறியவர் என்றும் இவ்வூர் மக்களின் பேச்சு வழக்காக இருந்து வருகிறது. அதன்படி கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று ஊரடங்கின் காரணமாக சித்திரை திருவிழாவும் ராமானுஜர் அவதார விழாவும் நடைபெறவில்லை.

இந்நிலையில் கடந்த 16 ஆம் தேதி ஆதிகேசவ பெருமாளுக்கு சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது இந்த உற்சவத்தில் முக்கிய நிகழ்வான 7 நாளான இன்று திருத்தேர் உற்சவம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு திருத்தேர் வடம் பிடித்து இழுத்தனர்.

இந்த திருத்தேரானது 80 அடி உயரம் கொண்டதாகும். தேரடித்தெரு,  காந்திசாலை,  திருவள்ளூர் சாலை வழியாக சுமார் 2 கிமீ தொலைவிற்கு திருத்தேரில் சுவாமி பவணி வருவார் இந்நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள் இந்து சமய அலுவலர்கள் , ஏராளமான ஆன்மிக பக்தர்கள் கலந்து சுவாமி தரிசனம் செய்தனர். இந்த தேர்திருவிழாவிற்காக தீயணைப்பு துறையினர் மற்றும் 200 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News