ஸ்ரீபெரும்புதூரில் அவலம்: கழிவுநீர் கால்வாய்க்குள் காட்சியளிக்கும் குடிநீர் குழாய்!

Kanchipuram News in Tamil -ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் தண்ணீர் குழாயை அகற்றாமல் அப்படியே நடுவில் வைத்து கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டுள்ள அவலம் அரங்கேறியுள்ளது.

Update: 2022-10-28 05:40 GMT

கழிவுநீர் கால்வாய் நடுவே அகற்றப்படாமல் காட்சியளிக்கும் குடிநீர் குழாய்.

Kanchipuram News in Tamil -தமிழகத்தில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபடும் ஒப்பந்ததாரர்கள் சிலரின் செயல் சமீப காலமாக கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது என்றே கூறலாம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தோடு சேர்த்து சாலை அமைத்தது, குடிநீர் அடிபம்பை பயன்படுத்த முடியாமல் கான்கிரீட் அமைத்தது என பல்வேறு வேடிக்கையான நிகழ்வுகள் அரங்கேறியது.

இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியதால் நெட்டிசன்கள் பல்வேறு எதிர்மறை கருத்துகளையும், நகைச்சுவை கருத்துகளையும் பதிவு செய்தனர். வேலூர் மாநகராட்சியில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஜீப்பை அப்புறப்படுத்தாமல் சாலை அமைத்தது தொடர்பாக உதவி செயற்பொறியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இதேபோன்று மற்றொரு அவலமான செயல் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் தற்போது அரங்கேறி உள்ளது. ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்குள்பட்ட 2 ஆது வார்டில் உள்ள தெருக்களில் 20 லட்சம் ரூபாய் மதிப்பில் கழிவுநீர் கால்வாய்கள் கட்டும் பணி சில மாதங்களாகவே நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் செல்லப்பெருமாள் நகர் பிரதான சாலையில் கட்டப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாய் நடுவே ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி மூலம் ஏற்கெனவே அமைக்கப்பட்டு, அந்தப் பகுதி மக்கள் பயன்படுத்தப்படும் குடிநீர் குழாய் அப்புறப்படுத்தாமல் அப்படியே காட்சியளிக்கிறது.

கால்வாய் கட்டுவதற்கு முன்னரே அந்தப் பகுதி மக்கள் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி அலுவலகம் மற்றும் இரண்டாவது வார்டு உறுப்பினர் பிரகாஷ் குட்டின், ஒப்பந்ததாரர் உள்ளிட்டோரிடம் குடிநீர் குழாயை அற்றிவிட்டு கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும் முறையிட்டு உள்ளனர்.

ஆனால், அந்தப் பகுதி மக்களின் வார்த்தைகளுக்கு செவி சாய்க்காமல் அப்படியே குழாயை கழிவு நீர் கால்வாய் நடுவே வைத்து கட்டப்பட்டுள்ளது. இதனால், தற்போது குடிநீர் குழாயில் வழியாக வரும் தண்ணீரில் கழிவு நீரும் கலந்து வருவதால் அந்த தண்ணீரை உபயோகப்படுத்தும் பொழுது சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பல இன்னல்களை சந்தித்து வருவதாக அந்தப் பகுதி மக்கள் வேதனையோடு கூறுகின்றனர்.

வேலூரில் நிகழ்ந்த சம்பவத்தைத் தொட்ந்து இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறக் கூடாது என அரசு தரப்பில் அதிகாரிகளுக்கும், ஒப்பந்ததாரர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதனை முறையாக கண்காணிக்காத நிலையில் தற்போது ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்றுள்ளது.

அதிகாரிகள் முறையாக கண்காணித்து இருந்தால் குடிநீர் குழாயை கால்வாய்க்குள் அமைத்து குடிநீர் விநியோகம் செய்யும் நிலை ஏற்பட்டிருக்காது என்றும், அரசு இந்த விவகாரத்தில் உரிய கவனம் செலுத்தி மெத்தன போக்கில் செயல்படும் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி நிர்வாகத்தின் மீதும், ஒப்பந்ததாரர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News