வரதராஜபுரத்தில் தாய் மகன் தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை
காஞ்சிபுரம் அருகே, வரதராஜபுரத்தில் தாய் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வரதராஜபுரம், கிருஷ்ணாநகர், 8வது தெருவில், தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பிரேம்குமார்(45). இவர் அம்பத்தூரில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் சீனியர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று வழக்கம் போல் பணிக்கு சென்றுவிட்டு, இரவு வீடு திரும்பிய போது கதவு மூடியிருந்தது. கதவை தட்டியும் திறக்கப்படாததால் சந்தேகமடைந்து, கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்த போது படுக்கையறையில் அவரது மனைவி சுகாசினி(38), மற்றும் மகன் பிரனித்(11), ஆகிய இருவரும் தூக்கில் தொங்கியவாறு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
தகவலறிந்து வந்த மணிமங்கலம் போலீசார், இருவரது உடல்களையும், கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். சுகாசினி சற்று மன நிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.