ஸ்ரீபெரும்புதூரில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.1.5 லட்சம் பறிமுதல்
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நெமிலி பகுதியில் தேர்தல் பறக்கும் படை வாகன சோதனையில் ரூ.1.5 லட்சம் பறிமுதல் செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமல் படுத்தப்பட்டு வேட்பாளர்களை கண்காணிக்க பறக்கும் படை அமைக்கப்பட்டு 24 மணி நேரம் பணி புரிந்து வருகின்றனர்.
அவ்வகையில் ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் பறக்கும் படை எண் 2 ல் வேளாண்மைத் துறை அலுவலர் திருமலை தலைமையில் சுரேஷ்குமார் மற்றும் காவலர்கள் இணைந்து இன்று மாலை 3 மணியளவில் நெமிலி சாலை அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர்.
இதில் தனியார் நிறுவன ஊழியர் அருண் என்பவர் தனது நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க எவ்வித ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூபாய் ஒரு லட்சத்தி 50 ஆயிரத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து பேரூராட்சி தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்தார்.