ஸ்ரீபெரும்புதூர் அருகே 100 கோடி மதிப்பிலான 36 ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிப்பிலிருந்து வருவாய்த் துறையினர் மீட்பு
ஸ்ரீபெரும்புதூர் அருகே அரசு அனாதீனம் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த வகையில் 36 ஏக்கர் நிலம் மீண்டும் வருவாய்த் துறையால் கைப்பற்றப்பட்டது இதன் சந்தை மதிப்பு 100 கோடி ரூபாய் என தெரிய வருகிறது.;
காஞ்சிபுரம் மாவட்டம் , ஸ்ரீபெரும்புதூர் பகுதி தொழிற்சாலை நகர பகுதியாக பல ஆண்டுகளுக்கு முன் மாறி அங்கிருந்த நிலம் பல கோடி ரூபாய் மதிப்பில் விற்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் வட்டம் தண்டலம் குறுவட்டத்தை சேர்ந்த மேவலூர்குப்பம் கிராமத்தில் சுமார் 200 ஏக்கர் அரசு அனாதீனம் நிலம் உள்ளது. இதனை சிலர் அரசுக்கு பணம் செலுத்தியும் , பலர் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து இருந்து வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு அரசு நிலத்தை அரசுக்கே விற்ற வகையில் ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் அளித்த புகாரின் பேரில் இதுவரை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் அப்பகுதியினை சுற்றி உள்ள 33 கிராமங்களில் உள்ள அரசு அனாதீனம் நிலங்களை கணக்கெடுக்க 6 பேர் கொண்ட வருவாய்த்துறையினர் பணியில் ஈடுபட்ட நிலையில் இன்று மேவலர் குப்பத்தில் உள்ள பகுதியில் சுமார் 36.23ஏக்கர் நிலத்தை வாகனம் நிறுத்தமிடங்கள், தனியார் பள்ளி கட்டிடம் குடியிருப்புகள் என ஆக்கிரமிப்பிலிருந்து வருவாய்த்துறை குழுவினர் மீட்டு அங்கு அரசு எச்சரிக்கை பலகையை வைத்துள்ளனர்.
இக்கிராமத்தில் மேலும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருவதால் ஆக்கிரமிப்பு உள்ள பலநூறு ஏக்கர்கள் மீட்கப்படும் என வருவாய்த் துறையினர் தெரிவித்துள்ளனர்.