சாலை சீரமைக்க கோரி திமுகவினர், வியாபாரிகள் சாலை மறியல்
ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் சுற்றிலும் செல்லும் பிரதான சாலைகளை சீரமைக்க கோரி மறியல் நடைபெற்றது.;
காஞ்சிபுரம் மாவட்டத்தின் தொழில் நகரமாக கருதப்படுகின்ற ஸ்ரீபெரும்புதூர் நகரை சுற்றி ஆயிரக்கணக்கான சிறு குறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றது. இதில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றார்கள். நகரின் வழியாக நாளொன்றுக்கு சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர் , சென்னை மார்க்கமாக சென்று வருகின்றது.
நகரில் ஆங்காங்கே சாலைகள் சேதமடைந்து காணப்பட்டு வருகின்றது. ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் மணிகூண்டு அருகே சென்னை, திருவள்ளூர் ,பெங்களூர் போன்ற நகரங்களுக்கு செல்லும் கூட்டுச் சாலையில் ஆங்காங்கே சேதமடைந்த ரோட்டில் உள்ள பள்ளங்களை அவ்வப்போது மண் கொட்டி மறைக்க முயற்சிப்பதால் அப்பகுதியில் செல்லும் பலருக்கு தூசு கண்களில் விழுந்தும், சுவாச கோளாறு ஏற்பட்டும், வணிக நிலையங்கள் முழுவதும் மாசு ஏற்பட்டும் பெரும் இடைஞ்சல் ஏற்படுகின்றது.
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பகுதியில் உள்ள சாலைகளை உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என கோரியும், இப்பணிகளை செய்து தராத மாநில நெடுஞ்சாலைத் துறையை கண்டித்தும் திமுக கவுன்சிலர்கள் மற்றும் வணிகர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் காவல் ஆய்வாளர் ரமேஷ், வணிகர்களிடம் சாலை உடனடியாக அமைத்து தரப்படும் எனக்கூறி, சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து வணிகர்கள் சாலை மறியலை கைவிட்டனர்.
வணிகர்கள் சாலை மறியல் செய்ததால் சென்னை மார்கமாக செல்கின்ற பேருந்துகளும், திருவள்ளூர் மார்கமாக செல்கின்ற தனியார் நிறுவன பேருந்துகளும், கட்டுமான பணிக்கு செல்கின்ற லாரிகளும் செல்ல முடியாமல் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.