ஊராட்சி மன்ற தலைவரின் புதிய கார்களுக்கு மர்ம நபர் தீ வைப்பு

ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவர் தமிழமுதன் மூன்று புதிய கார்களை வாங்கி இருந்த நிலையில், மர்மநபர்கள் தீ வைத்த சம்பவத்தில் ஒரு கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது

Update: 2023-01-21 14:15 GMT

ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவர் தமிழமுதன் வாங்கிய மூன்று கார்களில் மர்ம நபர்கள் தீ வைத்ததில் ஒரு கார் முற்றிலும் சேதம் அடைந்தது

ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவருக்கு சொந்தமான புதிய பொலிரோ கார்களை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் , ஸ்ரீபெரும்புதூர் வட்டத்திற்கு உட்பட்டது ஆதனூர் ஊராட்சி . அந்த ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருபவர் திமுகவை சேர்ந்த தமிழமுதன்.அவரது மனைவி மலர்விழி தமிழமுதன் ஒன்றிய குழு உறுப்பினராகவும் உள்ளார்.

இந்த நிலையில் தனது பல்வேறு சொந்த தேவைக்காக தமிழமுதன் மகேந்திரா நிறுவனத்தின் பொலிரோ என்ற புத்தம் புதிய மூன்று கார்களை வாங்கியுள்ளார். அந்த மூன்று கார்களையும் அவர் தனது வீட்டின் அருகே உள்ள கோயில் அருகே நிறுத்தி வைத்திருந்து உள்ளார்.


இந்த நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் இவரது புதிய காருக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து விட்டு சென்றுள்ளனர். அதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஊராட்சி மன்ற தலைவர் தமிழமுதனுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அவர் வீட்டை விட்டு வெளியே வந்து கார் நிறுத்தி வைத்திருந்த இடத்தை சென்று பார்த்தபோது அவரது கார் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. அதனைக் கண்ட அவர் அதிர்ச்சியில் உறைந்து போனார்.

புத்தம் புதிய மூன்று கார்களில் 15 லட்சம் ரூபாய் மதிப்புடைய ஒரு பொலிரோ கார் முற்றிலுமாக தீயில் எரிந்து சேதமடைந்தது. 

அதில் பற்றி எரிந்த தீயை ஊராட்சி மன்ற தலைவரும் அக்கம் பக்கத்தினரும் சென்று அணைத்ததால் மற்ற இரண்டு கார்களும் தீயில் எரிவதில் இருந்து தப்பியது. இருப்பினும் அந்த இரண்டு கார்களிலும் சிறு சிறு சேதங்கள் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து மணிமங்கலம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் வழக்கு குறித்து ஆராய்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஊராட்சி மன்ற தலைவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வழக்கின் விசாரணையில் மர்ம நபர்கள் அந்த கார் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து சென்றது தெரியவந்துள்ளது. தற்போது மணிமங்கலம் காவல் துறையினர் காருக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆதனூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவரின் புதிய காரை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News