சிக்கராயபுரம் பகுதியில் 210 ஏக்கரில் புதிய நீர்தேக்கம் - அமைச்சர் நேரு தகவல்
குன்றத்தூர் வட்டம், சிக்ராயபுரம் பகுதியில் உள்ள கல்குவாரியில் தேங்கும் நீரை பயன்படுத்த இன்று அமைச்சர்கள் நேரு, அன்பரசன் மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.;
சிக்கராயபுரம் பகுதியில் உள்ள பயன்படுத்தப்படாத கல் குவாரியில் தேங்கியுள்ள நீரை பயன்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்.
தமிழகத்தில் கடந்த நவம்பர் ஒன்றாம் தேதி வடகிழக்கு பருவமழை துவங்கும் எனவும், அதனைத் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு மழை நீடிக்கும் எனவும், சென்னை வானிலை மண்டல ஆய்வு மையம் அறிவித்தது. அவ்வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் , ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத், குன்றத்தூர், செம்பரம்பாக்கம், உத்திரமேரூர் பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்தது.
இதன் காரணமாக, சென்னையில் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது காரணமாக, கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, 100 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. மேலும் அருகில் உள்ள மாவட்டங்களிலும் கன மழை பெய்ததால், செம்பரம்பாக்கம் அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் பிள்ளைப்பாக்கம் உள்ளிட்ட ஏரிகள் நிரம்பி, அதன் உபரி நீர் செம்பரம்பாக்கத்திற்கு வர தொடங்கியதை அடுத்து, ஈர்த்தக்கம் பாதுகாப்புக் கருதி நேற்று 100 கன அடியில் இருந்து 500 கன அடியாக, நீர் வெளியேற்றம் அதிகரிக்கப்பட்டது. நீர் வெளியேற்றப்படுவதால் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு, மாவட்ட வருவாய் துறை அலுவலர்கள் சார்பில் குழு அமைக்கப்பட்டு, கண்காணித்து வந்தனர்.
இனி தொடர்ந்து வடகிழக்கு பருவ மழை பெய்த மாவட்டங்களில் நீர் சேமிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டு இனி வருங்காலங்களில் குடிநீர் தேவைக்கு அதனை பயன்படுத்த திட்டமிட தமிழக முதல்வர் ஸ்டாலின், அது தொடர்பான பணிகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
அவ்வகையில், காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் அடுத்த சிக்கராயபுரம் பகுதியில் ஏராளமான பயன்பாடற்ற கல்குவாரிகள் உள்ளன. இந்த கல்குவாரிகளில் தேங்கும் மழைநீரை, கோடைக்காலங்களில் சுத்திகரிப்பு செய்யப்பட்டு சென்னையின் குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீரை சிக்கராயபுரம் கல் குவாரிகளுக்கு கொண்டு வரவும், சிக்கராயபுரம் பகுதியில் புதிய நீர்தேக்கம் அமைப்பது குறித்து, சிக்கராயபுரம் பகுதியில் உள்ள கல் குவாரிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, ஊரக தொழில்துறை அமைச்சர் அன்பரசன் ஆகியோர் இன்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். தொடர்ந்து, பொதுப்பணித்துறை மற்றும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
ஆலோசனைக்கு பின் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் மழைநீரை அதிகளவில் தேக்கி வைக்கும் வகையில் பெரிய ஏரிகளை உருவாக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின், சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில், சிக்கராயபுரம் பகுதியில் உள்ள கல்குவாரிகளை ஒன்றிணைத்து அரசு இடம் 130 ஏக்கர் பரப்பளவு மற்றும் தனியார் நிலம் 80 ஏக்கர் என மொத்தம் 210 ஏக்கர் பரப்பளவில், புதிய நீர் தேக்கமாக மாற்ற முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும்.
இங்கு அமைய உள்ள புதிய நீர்தேக்கத்தில் உள்ள நீரை சுத்திகரிப்பு செய்து மாங்காடு மற்றும் குன்றத்தூர் நகராட்சிகளில் குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்படும், என்றார்.
இந்த ஆய்வின் போது ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவை உறுப்பினர் செல்வ பெருந்தகை, தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் படப்பை மனோகரன், சென்னை குடிநீர் வாரிய தலைமை பொறியாளர் ஜெயகர், குன்றத்தூர் நகராட்சி தலைவர் சத்தியமூர்த்தி, நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் அருள்மொழி உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.