ஸ்ரீபெரும்புதூர் அருகே கொரோனா அச்சம் காரணமாக இளைஞர் தூக்கிட்டு தற்கொலை
படப்பை அருகே தனியார் நிறுவன ஊழியா் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதால் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை;
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் முத்துராஜா (22).இவா் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகிலுள்ள ஒரகடத்தில் உள்ள இருசக்கர வாகனம் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தாா். படப்பை அருகே சாலமங்கலம் கிராமத்தில் நண்பா்களுடன் ஒரு வீட்டில் தங்கியிருந்து வேலைக்கு போய் வந்தாா்.
இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு முத்துராஜாவுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். அங்கு அவருக்கு நடந்த கொரோனா வைரஸ் பரிசோதனையில் முத்துராஜாவுக்கு பாசிடீவ் என்று தெரிய வந்தது.
இதையடுத்து அரசு மருத்துவமனையில் சோ்ந்து சிகிச்சைப் பெறுவதாக கூறிவிட்டு, தான் தங்கியிருக்கும் வீட்டிற்கு வந்து தனிமைப்படுத்திக் கொண்டாா்.
அதோடு மிகுந்த மனஉளைச்சலில் சக நண்பா்களிடம், சகோதரியின் திருமண ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில் எனக்கு இதைப்போன்று கொரோனா வைரஸ் பாதிப்பாகிவிட்டது.இனிமேல் சகோதரியின் திருமணத்தை எப்படி நடத்துவேன்? என புலம்பியுள்ளார். மேலும் தனக்கு வந்துள்ள கொரோனா வைரஸ் எல்லோருக்கும் பரவிவிடுமே என்றும் வேதனைப்பட்டாா். நண்பா்கள் அவரிடம்,சில நாட்களில் சரியாகிவிடும் என்று ஆறுதல் படுத்தினா்.
இந்நிலையில் நேற்று முத்துராஜா திடீரென வீட்டிலிருந்து மாயமாகிவிட்டாா். நண்பா்கள் தேடத்தொடங்கினா்.அப்போது அவா்கள் வீட்டின் பின்புறம் சுடுகாட்டில் உள்ள வேப்பமரத்தில் தூக்கிட்டு தொங்கிக்கொண்டிருந்தாா். இதை பாா்த்த நண்பா்கள் அதிர்ச்சியில் மணிமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.உடலை கைபற்றிய போலீசாா் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்தனா்.
அரசு பல நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கை மற்றும் பல்வேறு விழிப்புணர்வு , மருத்துவ சிகிச்சை முறைகள் என எடுத்துரைத்தும் இது போன்ற இளைஞரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.