அரசு நிலத்திற்கு இழப்பீடு பெற்ற 83 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம் : தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் நடவடிக்கை.
ஸ்ரீபெரும்புதூர் அருகே தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்கு நிலம் எடுத்து இழப்பீடு வழங்கியதில் 200 கோடி ரூபாய் முறைகேடு புகார் எதிரொலியாக அரசு நிலத்திற்கு இழப்பீடு பெற்ற 83 பேரின் வங்கி கணக்குகளை தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் , ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அமைக்க ஸ்ரீபெரும்புதூர் தாலுக்கா , பீமன்தாங்கல் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நிலம் எடுப்பு பணிகளை செய்துள்ளது.
இந்நிலையில் பீமன்தாங்கல் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலை அமைக்க கையகப்படுத்தும் நிலங்களுக்கு, நிலங்களின் உரிமையாளர்களுக்கு இழப்பீடாக 200 கோடி ரூபாய் முறைகேடாக வழங்கப்பட்டுள்ளது என்றும், நிலத்தின் உரிமையாளர்கள் பலபேர் அரசின் அனாதீனம், மேய்க்கால் புறம்போக்கு நிலங்களை பொய்யான ஆவணங்கள் சமர்ப்பித்து,பட்டா மாற்றி இழப்பீட்டு தொகையை பெற்றுள்ளனர் என்பது குறித்து புகார் எழுந்தது.
நில எடுப்பு இழப்பீடு மோசடி குறித்து பாதிக்கப்பட்ட நிலத்தின் உரிமையாளரான நவகோடி நாராயணன் என்பவர் தமிழக அரசின் நில நிர்வாக ஆணையருக்கு புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட நில நிர்வாக ஆணையர்., இது தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விவகாரம் என்பதால் இந்த புகாரை சிபிஐ விசாரிக்க நில நிர்வாக ஆணையர் பரிந்துரை செய்தார்.
இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் வெங்கடேசன் அளித்த புகாரின் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ரூபாய் 200 கோடி இழப்பீடு வழங்கியதில் முறைகேடு என்பதை உறுதி செய்தது.
இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலை களுக்கான நில எடுப்பு சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலராக இருந்த நர்மதா உள்ளிட்ட 5 அதிகாரிகள் மீது தற்போது வழக்கு பதிவு, புகார் அளித்த நவகோடி நாராயணனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் பீமன் தாங்கல் கிராமத்தில் அரசு நிலத்திற்கு முறைகேடாக பட்டா பெற்று இழப்பீட்டுத் தொகை பெற்றுக்கொண்ட 83 பேரின் வங்கிக் கணக்குகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடக்கி உத்தரவிட்டுள்ளது.
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் துறையினர் 83 பேரின் நில பட்டாக்களையும் ரத்து செய்து, அரசு நிலங்களாக மாற்றி உள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிக்கு இழப்பீடு வழங்கிய தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையமும் நடவடிக்கையில் இறங்கி உள்ளதால் 200கோடி ரூபாய் முறைகேடு புகார் வழக்கு விசாரணை விறுவிறுப்பு அடைந்துள்ளது.