நோய் தடுப்பு நடவடிக்கைகள் அவசியம் - சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் அட்வைஸ்

ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி இளைஞர் மேம்பாட்டு மையத்தில் மாணவர்களுக்கு மருத்துவ ஆலோசனைகளை சுகாதார செயலாளர் வழங்கினார்.;

Update: 2022-06-07 13:00 GMT

ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி இளைஞர் மேம்பாட்டு மையத்தில் தொற்று பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவ ஆலோசனைகளை சுகாதார செயலாளர் வழங்கினார்.

காஞ்சிபுரம் மாவட்டம் , ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ்காந்தி இளைஞர் மேம்பாட்டு மையத்தில் பயிலும் சில மாணவர்களுக்கு உருமாற்றம் கொண்ட புதிய வகை தொற்று அறிகுறி காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து சுகாதாரத்துறையினர் மையத்தில் பயிலும் 235 மாணவர்களுக்கு பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

இதில் 2 மாணவர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு தனியார் மற்றும் காஞ்சி அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்த 16 மாணவர்கள் அம்மைய வளாகத்தில் அனைவரும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

இம்மாணவர்களை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை  செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், நேரில் சந்தித்து மாணவர்களின் உடல் நிலை மற்றும் அவர்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார்.அதன் பின் செய்தியாளர்களிடம் பேசுகையில் , கடந்த ஓர் ஆண்டில் எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாம்களில் 85 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டனர். மருத்துவ வல்லுனர்கள் கூறுகையில் தடுப்பூசி செலுத்தி கொண்ட நபர்களுக்கு தற்போது உள்ள உருமாறிய வைரஸ் நோய்களுக்கு பாதிப்பு பெரிய அளவில் இருக்காது என தெரிவித்துள்ளனர்.

தற்போது தமிழகத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் பிற மாநில மற்றும் பிற மாவட்ட மாணவர்கள் என்பதும் குறிப்பாக கேரளா பகுதிகளில் இருந்து வந்த மாணவர்களுக்கு இந்த தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

மேலும் பொதுமக்கள் லேசான தொற்று அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக காலம் தாழ்த்தாமல் உரிய மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, மாவட்ட சுகாதார நலப் பணிகள் இணை இயக்குனர் பிரியராஜ் மற்றும் இளைஞர் மேம்பாட்டு மைய நிர்வாகி மற்றும் வட்டார மருத்துவர்கள் என பலர் இருந்தனர்.

.

Tags:    

Similar News