காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் அமைந்துள்ள பன்னாட்டு தொழிற்சாலை ஊழியர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 100சதவீதம் வாக்களிக்க வாக்காளர்களுக்கு மாவட்ட கலெக்டர் தலைமையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து விழிப்புணர்வு செய்து வருகின்றனர். அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரம் பகுதியில் அமைந்துள்ள பிரபல பன்னாட்டு நிறுவன ஊழியர்களுக்கு இன்று தேர்தல் குறித்த விழிப்புணர்வு மற்றும் மாதிரி வாக்குபதிவு மையம் அமைத்து மாதிரி வாக்குப்பதிவு செய்யப்பட்டது.
மேலும் அனைவரும் வாக்களிப்போம் என எழுதப்பட்ட பல வண்ண பலூன்களை பறக்கவிட்டும் , தேர்தல் ஜோதி ஏற்றப்பட்டது. இதன்பின் தொழிற்சாலை பணியாளர்கள் கலெக்டர் மகேஸ்வரி தலைமையில் கட்டாயம் வாக்களிப்போம் என உறுதிமொழி ஏற்றனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர்.அனுராதா , மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலர் ரவிச்சந்திரன், பன்னாட்டு நிறுவன தலைமை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.