இரவு பணியின் போது தொழிலாளர்களுக்கு உணவு அளிக்க கோரி கலெக்டரிடம் மனு
ஸ்ரீபெரும்புதூர் அருகே ஆட்டோமொபைல் தொழிற்சாலையில் தொழிலாளர்களுக்கு இரவு உணவு வழங்க கேட்டு கலெக்டரிடம் மனு அளித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த போந்தூர் பகுதியில் இயங்கி வருகிறது மதர்சன் ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை அமைந்துள்ளது.
இங்கு நிரந்தர பணியாளர்களாக 350 தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாக 1500க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.
இங்கு இரவு பணியில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இரவு உணவு அளிக்க மறுத்து வருவதாகவும் உணவு இடைவேளை கூட விட மறுத்து வருவதாகவும் கூறி கடந்த ஒரு மாத காலமாகவே தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழிற்சாலை நிர்வாகத்துக்கு அறிவுரை கூறி தொழிலாளருக்கு உணவு வழங்க பரிந்துரை செய்ய வேண்டும் என கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
இதுகுறித்து தொழிலாளர்கள் கூறுகையில் , உணவு இடைவேளை என்பதே இங்கு கிடையாது எனவும் பணிபுரிந்து வரும் இடத்திலே பிஸ்கட் பழம் என அளித்து விட்டு செல்வார்கள். நீண்ட நேரம் பணிபுரிய இது போதுமான உணவு இல்லை என்பதால் இரவு உணவு அளிக்க கோரி வருகிறோம் என தெரிவித்தனர்.