பிரபல பைக் தயாரிப்பு நிறுவனத்தில் சிலிண்டர் வெடித்து விபத்து
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சோமமங்கலம் பகுதியில் ராயல் என்பீல்ட் நிறுவனத்துக்கு சொந்தமான ஆர்பிட் கோட்டிங் நிறுவனம் இயங்கி வருகிறது.
ராயல் என்ஃபீல்டு கம்பெனியில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மூன்று நபர்கள் உட்பட ஐந்து நபர்கள் சென்னை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டுள்ளனர்.
தொழிற்சாலை மாவட்டம் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை, ஓரகடம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது.
கார் உற்பத்தி, இரு சக்கர வாகன உற்பத்தி மற்றும் இதற்கான உதிரி பாகங்கள் தயாரிப்பு கம்பெனி என பல நிலைகளில் இயங்கி வருகிறது
ஒவ்வொரு தொழிற்சாலைகளிலும் குறைந்தபட்சம் 500க்கும் மேற்பட்டோர் சுழற்சி முறையில் பணிபுரிந்து வருகின்றனர். இதில் ஆபத்தான முறையில் இயங்கும் கம்பெனிகள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் செயல்பட்டு வருகிறது. ஊழியர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் அளிக்கப்படும் கம்பெனிகளும் உள்ளது. சில தொழிற்சாலைகளில் பாதுகாப்பு உபகரங்கள் இன்றி வட மாநிலத் தொழிலாளர்கள் பணி புரிவதும் உண்டு.
இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சோமமங்கலம் பகுதியில் பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இதில் குறிப்பிடத்தக்க வகையில் ராயல் என்பீல்ட் நிறுவனத்துக்கு சொந்தமான ஆர்பிட் கோட்டிங் என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் நேற்று இரவு நைட் ஷிப்டில் இரும்பை பாலிஷ் செய்ய பயன்படுத்தும் அலுமினியம் கெமிக்கல் ஸ்பிரேவை உபயோகிக்கும் போது எதிர்பாராத விதமாக சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.
இதனை சற்றும் எதிர்பார்க்காத ஊழியர்கள் அதிர்ச்சியில் இருந்து மீளாத நிலையில், ஊழியர்கள் உடனடியாக வெளியேற இயலாததால் ஐந்து நபர்களுக்கு அணிந்திருந்த சட்டை உள்ளிட்ட உருகி உடலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் காட்டரம்பாக்கத்தைச் சேர்ந்த மதன் குமார்(26), திருவள்ளூர் மாவட்டம் அம்மையார் குப்பம் பகுதியைச் சேர்ந்த சேனாதிபதி(36), காஞ்சிபுரம் மாவட்டம் காட்டரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சுபாஷ்(19), ஸ்ரீபெரும்புதூர் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்(26), காட்ரம்பாக்கத்தைச் சேர்ந்த புத்துராஜ்(26) ஆகிய ஐந்து நபர்களுக்கு தீக்காயம் ஏற்பட்டது.
உடனடியாக ஐந்து நபர்களும் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை தீக்காய தடுப்பு பிரிவு - அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த தீ விபத்தில் மதன்குமார் என்பவருக்கு 70 % காயங்களும், சேனாதிபதி என்பவருக்கு 70% தீக்காயங்களும் சுபாஷ் என்பவருக்கு 80% தீக்காயங்களும் ஏற்பட்டு உயிருக்க்ய் ஆபத்தான நிலையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து சோமங்கலம் காவலதுறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொழிற்சாலை உபகரணங்கள் குறிப்பாக பாய்லர், சிலிண்டர் கொண்டு செயல்படும் இயந்திரங்கள் போன்ற உபகரணங்களை முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என்பதும் இது குறித்த தகவல்கள் தகவல் பலகையில் வைக்கப்பட வேண்டும் என்பதை எந்த ஒரு தொழிற்சாலையும் முறையாக பின்பற்றுவதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.