குன்றத்தூர் முருகன் கோயிலில் முதல் கல்யாண நிகழ்வுக்கு இருதரப்பினர் கைகலப்பு
குன்றத்தூர் முருகன் கோயிலில் முதல் திருமணம் நிகழ்வு குறித்த வாக்குவாதத்தில் இருதரப்பினரிடையே கைகலப்பில் முடிந்தது.;
கொரோனாவின் மூன்றாவது அலை பரவாமல் தடுக்க தமிழக அரசு சார்பில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் வழிபாட்டு தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த மாதம் ஆடி மாதம் என்பதால் சுப நிகழ்ச்சிகள் நடைபெறாமல் இருந்தது. தற்போது ஆடி மாதம் முடிந்து இன்றைய தினம் முதல் முகூர்த்த நாள் என்பதால் குன்றத்தூர் முருகன் கோவிலில் 30 க்கும் மேற்பட்ட திருமணங்கள் இன்று நடைபெற்றது.
ஒவ்வொரு ஜோடிகளுக்கும் 15 நிமிடங்களில் ஒரே இடத்தில் திருமணம் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டது. கோவிலில் நடந்த திருமணத்தின் போது மணமகன், மணமகள் வீட்டார் இடையே யாருக்கு முதலில் என தகராறு ஏற்பட்டதில் கோவில் வளாகத்திற்குள்ளேயே மாறிமாறி தாக்கிக்கொண்ட காட்சிகளும் அரங்கேறியது .
கொரோனாவின் மூன்றாவது அலை உருவாக தற்போது இந்த திருமணங்கள் ஒரு காரணம் ஆகிவிடுமோ என்ற பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த திருமணங்களின் போது பொதுமக்கள் யாரும் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவத்தால், அப்பகுதியில் கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார், அதிகளவில் கூடியிருந்த மக்களை வெளியேற்றி, கோவில் வாசலில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.