காஞ்சிபுரம் வரதராஜபுரம் பகுதியில் தமிழக முதல்வர் மூன்றாவது முறையாக ஆய்வு
காஞ்சிபுரம் மாவட்டம் முடிச்சூர், புவனேஷ்வரிநகர், பிடிசி காலனியில் மழை நீர் வெளியேறிய நிலையில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் என ஒன்றன் பின் ஒன்றாக உருவாகி மாவட்டம் முழுவதும் வரலாறு காணாத மழை மற்றும் பல்வேறு பகுதிகளில் நீர் சூழ்ந்து குடியிருப்புகளில் பொதுமக்கள் பெரிதும் அவதியுற்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீர் சூழ்ந்த பகுதிகளான வரதராஜபுரம் முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் ஏற்கெனவே இருமுறை ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தினார். அதன்பேரில், பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக நீர் அனைத்தும் தற்போது வெளியேற்றப்பட்டு பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகின்றனர்.
மழை நீர் வெளியேற்றப்பட்ட பின் இனி வருங்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இன்று மூன்றாவது முறையாக தமிழக முதல்வர் ஸ்டாலின் புவனேஸ்வரி நகர் , பிடிசி.காலனி, முடிச்சூர் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு அங்கிருந்த பொதுமக்களிடம் குறைகள் மனுக்களை பெற்றுக் கொண்டு இனிவரும் காலங்களில் இந்நிகழ்வுகள் தவிர்க்கப்படும் எனவும் ஆறுதல் தெரிவித்தார்.
அதன்பின், புவனேஷ்வரி நகர் பகுதியில் அடையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மேம்பாலம் பகுதியை ஆய்வு மேற்கொண்டு, அங்கு மாவட்ட சார்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த புகைப்படங்களை பார்வையிட்டு பல்வேறு ஆலோசனைகளை மாவட்ட ஆட்சியருக்கு வழங்கினார்.
ஆய்வின் போது, தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், வெள்ளத் தடுப்பு சிறப்பு கண்காணிப்பு அதிகாரி அமுதா, மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்
.