காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த கோவளவேடு பகுதியை சேர்ந்தவர் தினேஷ். இவர் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்களைப் பணிக்கு அனுப்பும் தொழில் செய்து வருகிறார்.
இந்நிலையில் தினேஷ் ஜிஎஸ்டி வரி செலுத்துவதற்காக சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கிவரும் இந்தியன் வங்கிக் கிளையில் இருந்து ரூபாய் 3 லட்சம் எடுத்துக்கொண்டு ஸ்ரீபெரும்புதூர் - சென்னை சாலையில் உள்ள சுமதி திரையரங்கம் அருகே உள்ள தனது ஆடிட்டர் அலுவலகத்துக்கு செல்வதற்காக காரில் வந்துள்ளார்.
காரை சாலையோரம் நிறுத்திவிட்டு அருகில் உள்ள டீக்கடைக்கு சென்று திரும்பி வந்து பார்க்கும்போது காரின் பக்கவாட்டு கண்ணாடி உடைக்கப்பட்டு காரில் இருந்த ரூபாய் 3 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
கொள்ளை சம்பவம் குறித்து முறையாக ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் ஸ்ரீபெரும்புதூர் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை பார்த்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
முக்கிய சாலைகளில் அதிக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் பட்டப்பகலில் இச்சம்பவம் நடைபெற்றது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.