கொத்தடிமைகள் 12 பேர் மீட்பு: வருவாய் கோட்டாட்சியர் குழு நடவடிக்கை

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மன்னூர் கிராமத்தில் மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்த கொத்தடிமைகளை மீட்டு அரசு உதவிகள் வழங்கப்பட்டன.;

Update: 2022-03-17 01:30 GMT

ஸ்ரீபெரும்புதூர் அருகே கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட 12 நபர்கள்.

காஞ்சிபுரம் மாவட்டம் ,  ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மன்னூர் கிராமத்தை சேர்ந்தவர் வேணு. இவர் மரங்களை வெட்டி கட்டைகளை பல்வேறு இடங்களுக்கு விற்பனை செய்து வருகிறார். இவரிடம் செங்கல்பட்டு மாவட்டம் ,  மதுராந்தகம் ஒன்றியத்தைச் சேர்ந்த 12 பேர் மரம் வெட்டும் தொழிலுக்கு வந்தனர்.

கூலி தொழிலுக்கு ஈடுபடுத்தப்பட்ட 12 இருளர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு கூலி வழங்காமல் கொத்தடிமைகளாக பணி செய்து வருவதாக மக்களுக்கான மறுவாழ்வு நல சங்கத்தின் சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் பேரில் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மண்ணூர் ஏரிக்கரை பகுதியில் ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் சைலேந்திரன், வட்டாட்சியர் ஜெயகாந்தன் உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் ஒரு சிறுவன் உள்பட 12 பேர் வேணு என்பவரிடம் கொத்தடிமைகளாக பணி செய்து வருவது விசாரணையில் கண்டறியப்பட்டது.

பின்னர் 12 பேரையும் வருவாய் துறை அதிகாரிகள் மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு பள்ளியில் உள்ள முகாமில் பத்திரமாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மேலும் கொத்தடிமைகளாக வைத்திருந்த வேணு என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீட்கப்பட்ட நபர்களுக்கு அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News