காஞ்சிபுரத்தில் ஒரகடம் அருகே ஆதிகால மனிதர்கள் வாழ்விடத்தில் தொல்லியல் துறையினர் ஆராய்ச்சி..!

காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அருகே குருவன்மேடு பகுதியில் தொல்லியல் துறை ஆய்வாளர்கள், அதிகாரிகள் அகழ்வாராய்ச்சி பணியை இன்று துவக்கினர்.

Update: 2022-07-03 12:30 GMT

காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அருகே குருவன்மேடு பகுதியில் தென்னிந்திய தொல்லியல்துறை கண்காணிப்பாளர் தலைமையில், ஆய்வாளர்கள் அகழ்வாராய்ச்சி பணியை துவக்கினர்.

காஞ்சிபுரம் மாவட்டம்,  ஸ்ரீபெரும்புதூர் வட்டம், ஒரகடம் அடுத்த வடக்குப்பட்டு ஊராட்சிக்குபட்ட குருவன்மேடு கிராமப் பகுதியில் தொல்லியல் துறை சார்பில் அகழ்வாராய்ச்சி பணி இன்று துவங்கியது. இந்த கிராமத்தில் தொன்மை வாய்ந்த ஆதிகால தமிழர்கள் வாழ்விட தடயங்கள் கொண்ட மணல்மேடு காணப்பட்டது. மேட்டுப்பகுதியில் இருந்து சில நாட்கள் முன்பு பழமை வாய்ந்த சிவலிங்கம் ஒன்று கண்டெடுக்கப்பட்டு, சிறிய கூரை அமைத்து பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அப்பகுதியில் ஆராய்ச்சி மேற்கொள்ள முடிவு மேற்கொள்ளப்பட்டது. தற்போது 100 அடி நீளம் 100 அடி அகலத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ள காஞ்சிபுரம் மாவட்டம் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் இன்று காலை இப்பணிகளை துவக்க தென்னிந்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர்  அமர்நாத் ராமகிருஷ்ணன் மற்றும் சென்னை வடக்கு மண்டல தொல்லியியல் துறை கண்காணிப்பாளர் எம். காளிமுத்து, ஊராட்சி மன்ற தலைவர் நந்தினி மேத்தா வசந்தகுமார் ஆகியோர் பங்கேற்று பணிகளை துவக்கி வைத்தனர்.

இப்பணிகள் குறித்து அமர்நாத் ராமகிருஷ்ணன் கூறுகையில், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது. பல்வேறு இடங்களில் பணிகள் நடைபெறும்போது மட்டுமே வரலாற்று உண்மைகள் பதிவு செய்யமுடியும். 70 ஆண்டுக்கு பிறகு தற்போது ஆராய்ச்சி பணி நடைபெறுகிறது. இங்கு மூன்று மாதங்களுக்கு பிறகு தான் வரலாற்று உண்மை தெரிய வரும். இங்கு அதற்கான தடயங்கள் கிடைக்கும் என தெரிய வருகிறது என குறிப்பிட்டார். இந்நிகழ்வில் வரலாற்று ஆய்வாளர் அஜய் குமார் , பிரசன்னா மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News