ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தெர்மகோல் குடோன் உள்ளிட்ட இரு இடங்களில் தீ
ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தெர்மகோல் குடோன் உள்பட இரு இடங்களில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.;
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வடமங்கலம் பகுதியில் தனியார் தெர்மகோல் தொழிற்சாலை தீ பிடித்து எரிந்தது.
ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் தெர்மாகோல் குடோனில் ஏற்பட்ட திடீர் தீயை ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்புத் துறையினர் மூன்று மணி நேரம் போராடி அணைத்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே வடமங்கலம் கிராமத்தில் ஜெயக்குமார் என்பவருக்கு சொந்தமான தர்மாகோல் குடோன் உள்ளது. இந்த தெர்மாகோல் குடோன் நள்ளிரவு 12 மணி அளவில் தீப்பிடித்து எரிவதாக ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்திற்கு தகவல் வந்ததையடுத்து ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு துறையினரின் உதவியோடு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூன்று மணி நேரம் போராடி தீயை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்து முழுவதுமாக தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால் 2 லட்சம் மதிப்புள்ள தெர்மாகோல் சேதம் அடைந்துள்ளது.
மேலும் இந்த தீ விபத்து மின்சார கசிவின் காரணமாக நடந்ததா? அல்லது வேறு ஏதும் காரணமா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தெர்மாகோல் குடோன் உள்ளே யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர் அருகே சாலையோரம் உள்ள காலி நிலங்களில் உள்ள பொருட்களின் இடையே திடீரென தீ விபத்து ஏற்பட்டு தீ கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்து புகை மூட்டமாக காணப்பட்டது.
இதுகுறித்து அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் அங்கு வந்து மேலும் காலி நிலங்களில் தீ பரவாமல் இருக்க நீரினை அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தினால் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு சாலைகளில் வாகனங்கள் மெள்ள ஊர்ந்து சென்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் சுமார் 30 நிமிடம் நீடித்தது.
சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளை நெறிப்படுத்தி விபத்து இன்றி அப்பகுதியை கடக்க பணிகளை மேற்கொண்டனர்.
தேசிய நெடுஞ்சாலையில் காலியாக உள்ள பகுதிகளில் குப்பை கழிவுகளை கொட்டுவதும் அதை மர்ம நபர்கள் அப்பகுதியாக செல்லும்போது கொளுத்தி விட்டு செல்வதால் புகையால் முன் செல்லும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே காலி இடங்களில் குப்பை கொட்டுவதை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிறுவனங்கள் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.