குன்றத்தூர் அருகே குடி போதையில் ஓட்டிய லாரியால் கல்லூரி மாணவர் பலி
குன்றத்தூர் அருகே குடி போதையில் டிரைவர் ஓட்டிய லாரியால் கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.;
குன்றத்தூர் அருகே காரை இடித்து சென்ற லாரியை மடக்கிய போது வாக்குவாதம் ஏற்பட்ட போது லாரியை டிரைவர் முன்னோக்கி எடுத்ததில் கீழே விழுந்து கல்லூரி மாணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம், வேல் நகர் பகுதியை சேர்ந்தவர் நேதாஜி, இவரது மகன் மோகன்ராஜ்(வயது22), இன்று தனது குடும்பத்துடன் வேலூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். நந்தம்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த லாரி காரின் வலது பக்க கண்ணாடியை உடைத்து விட்டு நிற்காமல் வேகமாக சென்று விட்டது,
இதனால் ஆத்திரமடைந்த மோகன்ராஜ் காரை வேகமாக ஓட்டி சென்று புதுப்பேடு அருகே சென்ற லாரியை மடக்கி நிறுத்தி விட்டு காரின் கண்ணாடியை உடைத்து விட்டு வந்த லாரி டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
வாக்குவாதம் முற்றியதையடுத்து டிரைவரை மோகன்ராஜ் லாரியின் டிரைவர் பகுதியில் ஏறி அடிக்க முற்பட்டபோது குடிபோதையில் இருந்த லாரி டிரைவர் திடீரென லாரியை முன்னோக்கி எடுத்த போது மோகன்ராஜ் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் லாரியின் சக்கரம் மோகன்ராஜ் மீது ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.
இதனை கண்டதும் மோகன்ராஜின் பெற்றோர் கதறி துடித்தனர், இதனை கண்டதும் லாரி டிரைவர் லாரியை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடி விட்டார்.
இந்த தகவல் மோகன் ராஜின் உறவினர்களுக்கு தெரிந்ததையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து லாரியின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினார்கள்.
இது குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்து போன மோகன்ராஜ் உடலை மீட்டு பிரத பரிசோதனை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் கார்த்திகேயனை(38) கைது செய்து விசாரித்து வருகின்றனர். இறந்து போன மோகன்ராஜ் கல்லூரி மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.
காரின் கண்ணாடியை உடைத்து விட்டு சென்ற லாரியை மடக்கி கேட்டபோது லாரியை முன்னோக்கி எடுத்ததில் கீழே விழுந்து கல்லூரி மாணவன் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கி இறந்து போன சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
இதே போல் காஞ்சிபுரம் அடுத்த இளையனார்வேலூர் பகுதியை சேர்ந்த கோகுல் என்பவர் ஒரகடம் பகுதியில் தனியார் தொழிற்சாலை பணிக்கு காலை சென்று கொண்டிருந்த போது , வாலாஜாபாத்தில் இருந்து உத்திரமேரூர் போக்கி சென்று கொண்டிருந்த தனியான தொழிற்சாலை பேருந்து நேருக்கு நேர் மோதியத்தில் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து மாகரல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பேருந்து ஓட்டுநரை கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெருமளவில் கல்குவாரிகள் இருப்பதால் கனரக லாரிகள் , தொழிற்சாலை பேருந்துகள் கல்லூரி பேருந்துகள் என அனைத்தும் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல வேண்டி உள்ளதால் அதிவேகமாக செலுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.