கனமழை காரணமாக 100 வருட நாவல் மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு
ஸ்ரீபெரும்புதூர் - திருவள்ளூர் சாலையின் குறுக்கே ராட்சத நாவல் மரம் விழுந்ததால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. .;
ஸ்ரீபெரும்புதூர் திருவள்ளூர் சாலையில் செங்காடு அருகே சாலை ஓரம் இருந்த நூறாண்டு நாவல் மரம் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை காரணமாக காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என கடந்த ஒன்றாம் தேதி சென்னை வானிலை மண்டல ஆய்வு மையம் அறிவித்தது.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒன்றாம் தேதியிலிருந்து தொடர்ந்து கன மழை பெய்து வந்தது தற்போது ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த இரண்டு நாட்களாக காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதிகளான ஸ்ரீபெரும்புதூர் குன்றத்தூர், செம்பரம்பாக்கம், ஒரகடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
கடந்த 11 நாட்களில் ஸ்ரீபெரும்புதூரில் 232 மில்லி மீட்டரும் செம்பரம்பாக்கத்தில் 287 மில்லி மீட்டர் குன்றத்தூரில் 323 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
தொடர் மழை காரணமாக ஸ்ரீபெரும்புதூர் சுற்றியுள்ள பிள்ளைபாக்கம் , மணிமங்கலம் உள்ளிட்ட பல்வேறு ஏரிகளில் நீர் நிரம்பி வருகிறது. மேலும் தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாலையோரம் இருக்கும் பல ஆண்டுகளான மரங்கள் தற்போது வலுவிழுந்து அதன் கிளைகள் முறிந்து வருகிறது .
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் , ஸ்ரீபெரும்புதூர் அடுத்த செங்காடு பகுதியில் ஸ்ரீபெரும்புதூர் திருவள்ளூர் சாலையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த தொடர் மலை காரணமாக ராட்சத மரம் ஒன்று வேருடன் சாய்ந்து முறிந்து சாலையின் குறுக்கே விழுந்துள்ளது. இந்த மரம் இ.பி. வயர் மீது விழுந்ததால் இ.பி வயரும் மரத்தோடு சேர்ந்து சாலையின் குறுக்கே கீழே விழுந்துள்ளது.இதனால் ஸ்ரீபெரும்புதூர் திருவள்ளூர் சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
ஒரு மணி நேரத்திற்கு மேலாக எந்த ஒரு மீட்பு நடவடிக்கையும் நடைபெறாத சூழலில் இரு சக்கர வாகனத்தில் வருகிறவர்கள் ஆபத்தை உணராமல் கீழே கிடக்கின்ற மின் ஒயர் அருகே ஆபத்தான நிலையில் சென்று கொண்டிருந்தனர். இந்த போக்குவரத்து துண்டிப்பால் நீண்ட வரிசையில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் காத்துக் கிடந்தன.
மேலும் திருவள்ளூரிலிருந்து ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் பகுதியில் உள்ள பல்வேறு நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் குறித்த நேரத்தில் வேலைக்குச் செல்ல முடியாததால் அவதியுற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது சாலையின் குறுக்கே விழுந்துள்ள மரத்தை அகற்றும் பணி நடைபெற்று இந்த சாலையில் தற்போது வாகனங்கள் சென்று கொண்டிருக்கின்றன.
இதே போல் பல்வேறு இடங்களில் சாலையோர வலுவற்ற இருக்கும் மரங்களை கண்காணிக்கவும், தேவைப்பட்டால் பொதுமக்களின் நலனுக்காக அதை அப்புறப்படுத்தவும் தயங்ககூடாது என பலர் கோரிக்கை வைக்கின்றனர்.
இதனை அகற்றாவிட்டால் தொழிற்சாலை பணி முடிவு நேரங்களில் இச்சாலைகளில் போக்குவரத்து அதிகம் இருக்கும் என்பதால் பெரும் விபத்தினை முன்னெச்சரிக்கையாக தவிர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.