ஸ்ரீபெரும்புதூர் அருகே நல்ல பாம்பு கடித்து 6 வயது சிறுவன் பலி
ஸ்ரீபெரும்புதூர் அருகே நல்ல பாம்பு கடித்து 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;
சிறுவன் ரா.சச்சின்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சரப்பனஞ்சேரி நாட்டரசன் பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராமு. இவருக்கு சச்சின் மற்றும் விக்னேஷ் என இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் நேற்று சச்சின் மற்றும் விக்னேஷ் வீட்டு அருகில் உள்ள வயல்வெளியில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென எதிர்பாராதவிதமாக நல்லபாம்பு சச்சினை கடித்துள்ளது.
இதனைக் கண்டு அதிர்ந்து போன ராமு மற்றும் உறவினர்கள் சச்சினை உடனடியாக பொத்தேரி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அக்கம்பக்கத்தினர் சச்சினை கடித்தபாம்பை அடித்து கொன்றனர்.
இந்நிலையில் இன்று சிகிச்சை பலனளிக்காமல் சச்சின் உயிரிழந்தார். தகவல் அறிந்து விரைந்து சென்ற மணிமங்கலம் காவல்துறையினர் சச்சினின் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் 6 வயது சிறுவன் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.